Friday, June 5, 2015

4. காதல் என்பது எதுவரை?

இந்தக் கதை எனக்குத் தெரியும் என்பது அப்பாவுக்குத் தெரியாது. ஒரு சமயம் நான் தூங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுத்தான் நான் இதை அறிந்து கொண்டேன்.

அப்பா ஒரு வாரப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். அதில் வந்திருந்த கேள்வி-பதில்' பகுதியில் தான் படித்த ஒரு சுவாரசியமான விஷயத்தை அப்பா அம்மாவிடம் சொல்லி ரசிக்க விரும்பினார். அதனால் வம்பில் மாட்டிக்கொண்டார்!

"இங்கே பார்த்தாயா 'நீங்கள் இள வயதில் காதலித்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கும் பதிலை? 'ஜலதோஷம் பிடிக்காத மூக்கு, சிரங்கு வராத சருமம், காதல் வயப்படாத இளமை இவை மூன்றும் இல்லவே இல்லை!' என்று பதில் சொல்லி இருக்கிறார். எவ்வளவு உண்மை?"

"எவ்வளவு உண்மையா? அப்படியானால் நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?" என்று பிடித்துக் கொண்டார் அம்மா.

"நான் காதலைப் பற்றிச் சொல்லவில்லை. மற்ற இரண்டையும் பற்றிச் சொன்னேன்" என்றார் அப்பா.

"சமாளிக்காதீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். உங்களை நான் ஒன்றும் விவாகரத்து செய்து விட மாட்டேன்" என்றார் அம்மா.

"அப்படியெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்து விடுமா என்ன?" என்று அப்பா சொன்னது எனக்கு மட்டும் கேட்டது. அம்மாவுக்கு நிச்சயமாகக் கேட்டிருக்காது!

"நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வகுப்பில் படித்த ஒரு பெண் கணக்கில் மிகவும் பலவீனமாக இருந்தாள். நான் கணக்கில் நிறைய மதிப்பெண்கள் வாங்குவேன். அவள் அப்பாவும்  என் அப்பாவும் சிறு வயது முதலே நண்பர்கள். அவள் அப்பா என் அப்பாவிடம் கேட்டுக் கொண்டதால் என் அப்பா என்னை அவளுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னார்."

"அவள் பெயர் என்ன?"

"ராதிகா."

"அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட மாடர்ன் பெயர்கள் எல்லாம் வைத்திருக்கிறார்களே! அவள் எப்படி இருப்பாள்? அழகாக இருப்பாளா?"

"இங்கே பார். அந்த வயதில் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் அழகாக இருப்பாளா என்றெல்லாம் நினைக்கத் தோன்றாது."

"ஏன், சினிமா நடிகைகளைப் பார்த்து அழகு, அழகில்லை என்றெல்லாம் அந்த வயதில் நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசிக் கொண்டதில்லையா? சரி. பரவாயில்லை. மேலே சொல்லுங்கள்."

"நான் என்ன கதையா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? தினமும் மாலையில் அவள் என் வீட்டுக்கு வருவாள். எங்கள் வீட்டில் இருட்டாக ஒரு அறை இருக்கும். அதற்குக் காமரா உள் (அறை) என்று பெயர். அப்போது எங்கள் வீட்டில் மின்சார விளக்குக் கூடக் கிடையாது. அந்த அரை இருட்டில்தான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே! அந்த அறைக் கதவு திறந்துதான் இருக்கும். கதவு திறந்திருந்தால்தான் கூடத்திலிருந்து கொஞ்சமாவது வெளிச்சம் வரும்! அறைக்கு நேர் வெளியே யாராவது உட்கார்ந்து கொண்டோ நடமாடிக்கொண்டோதான் இருப்பார்கள். அன்றன்றைக்கு வகுப்பில் ஆசிரியர் போட்ட கணக்குகளை அவளுக்குப் புரியும்படியாகப் போட்டுக் காட்டுவேன். அவ்வளவுதான்."

"ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கிளாஸ்?"

"அரை மணி நேரம் இருக்கும். அதற்குள் இருட்டி விடும். அதற்குள் அநேகமாக அன்று வகுப்பில் போடப்பட்ட கணக்குகள் எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பேன்."

"கணக்கு வாத்தியார் சொல்லிக் கொடுத்தபோது புரியாதது நீங்கள் சொல்லிக் கொடுத்தபோது புரிந்ததாக்கும்!"

"அப்படித்தான் அவள் தன் அப்பாவிடம் சொல்லி இருக்கிறாள். அதை அவர் என் அப்பாவிடம் வந்து சொன்னார். அதோடு காலாண்டுத் தேர்வில் கணக்கில் ஃபெயில் மார்க் வாங்கியவள் அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள். அவள் அப்பாவுக்கு ரொம்பவும் சந்தோஷம். 'இதற்கு நீதாண்டா காரணம்' என்று என்னை நேரடியாகப் பாராட்டினார். எனக்கு நன்றி கூடச் சொன்னார்."

"உங்கள் அப்பா என்ன சொன்னார்?"

"என் அப்பா சொன்னதுதான் என் மனதை மிகவும் நோகடித்து விட்டது."

"அப்படி என்ன சொன்னார்? 'என் பிள்ளைக்கே கணக்கு வராது. அவன் சொல்லிக் கொடுத்து உன் பெண் கணக்கில் தேறி விட்டாள் என்றால், உன் பெண்தான் புத்திசாலியாக இருக்க வேண்டும்' என்று சொன்னாரா?"

"பக்கத்தில் நின்று கேட்டது போல் சொல்லுகிறாய்! ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லயே!"

"வேறு எப்படிச் சொன்னார்? சீக்கிரம் சொல்லித் தொலையுங்கள். ஏன் இப்படி சஸ்பென்ஸ் வைத்து என் கழுத்தை அறுக்கிறீர்கள்?"

"நீதான் நான் சொல்வதற்குள் குறுக்கே பேசி, இப்படிச் சொன்னாரா, அப்படிச் சொன்னாரா என்று கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தாய்!"

"கன்னத்தில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்கிறேன். இனிமேலும் என்னால் சஸ்பென்ஸைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சீக்கிரம் சொல்லுங்களேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தார் அம்மா.

"கன்னத்தில் போட்டுக் கொண்டால் போதாது. தோப்புக் கரணம் போட வேண்டும், 108 தடவை. சரி சரி, அழுது விடாதே. சொல்லி விடுகிறேன். என் அப்பா என்ன சொன்னார் என்றால்..." என்று அப்பா நிறுத்தினார்.

அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்.

"அப்பா என்ன சொன்னார் என்றால், 'இதற்கு ஏன் நன்றி எல்லாம் சொல்கிறாய்? இவனுக்கு ஒரு தங்கை இருந்தால் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டானா?' என்றார்!" என்று முடித்தார் அப்பா.

சற்று முன்பு வரை இருந்த இறுக்கம் உடைந்து அம்மா பெரிதாகச் சிரித்தார். "அடப்பாவமே! ஜெமினி-சாவித்திரி போல் காதல் ஜோடியாக இருந்த உங்களை சிவாஜி-சாவித்திரி மாதிரி அண்ணன் தங்கைகளாக மாற்றி விட்டாரே உங்கள் அப்பா! அதனால்தான் காதல் மன்னர் மனம் நொந்து போய் விட்டீர்களோ?"

"நான் மனம் நொந்தது அதற்காக இல்லை. நான் கஷ்டப்பட்டு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவளும் கற்றுக் கொண்டு நிறைய மார்க் வாங்கி இருக்கிறாள். இதற்காக அவள் அப்பா என்னைப் பாராட்டினால், அதற்கு நான் தகுதி இல்லாதவன் என்கிற மாதிரி சொல்லி விட்டாரே என் அப்பா என்பதுதான் எனக்கு வருத்தம்."

"இந்த அப்பாக்களே அப்படித்தான்!"

"இரைந்து பேசாதே. நம் பையன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு நீ சொன்னது அவன் காதில் விழுந்து விடப் போகிறது" என்றார் அப்பா. அப்பாவின் நகைச்சுவை உணர்வைக் கண்களை மூடியபடியே ரசித்தேன்.

"அது சரி, உங்கள் அப்பா உங்களை அண்ணன் தங்கை என்று பேசிய பிறகுமா நீங்கள் அந்தப் பெண்ணைக் காதலித்தீர்கள்?" என்றார் அம்மா, கதையின் மையக்கருத்தை மறக்காமல்.

"இரண்டு விஷயம்" என்றார் அப்பா பொறுமையாக. அப்பா பொறுமையாகப் பேசினால் அவர் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுகிறார் என்று அர்த்தம்!

"முதல் விஷயம் - என் அப்பா ஒரு பேச்சுக்கு அந்தப் பெண்ணை என் தங்கை போல் என்று சொன்னதால் நாங்கள் அண்ணன் தங்கை ஆகி விட மாட்டோம்!"

"ஓ! இப்படி ஒரு நியாயமா?"

"நான் சொல்வதை முழுவதுமாகக் கேள்" என்றார் அப்பா. இப்போது அவர் "பொறுமை" இன்னும் சற்று அதிகரித்திருந்தது! "இரண்டாவது விஷயம் - எங்களுக்குள் கடைசி வரை ஒரு காதலும் வரவில்லை."

"அப்படியானால், ஏன் இதைக் காதல் கதை என்று சொன்னீர்கள்?" என்றார் அம்மா ஏமாற்றத்துடன்.

"நான் எப்போது சொன்னேன்? முதலிலிருந்தே நான் யாரையும் காதலிக்கவில்லை என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? நீதான் நம்பாமல் 'சொல்லுங்கள்,' 'சொல்லுங்கள்' என்றாய்!"

"அப்புறம் ஏன் இந்தக் கதையைச் சொன்னீர்கள்?"

"நீதானே காதல் கதை கேட்டாய்?"

"அதுதான் உங்களுக்குள் காதல் வரவேயில்லை என்று சொன்னீர்களே?"

"எனக்குக் காதல் வராவிட்டால் என்ன? கதையில் காதல் வருகிறதே! நான் கதையை முழுவதுமாகச் சொல்வதற்குள் நீ அவசரப் பட்டால் நான் என்ன செய்வது?"

அம்மாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து மௌனமாக இருந்தார்.

"என்ன பதிலையே காணோம்?" சீண்டினார் அப்பா!

"நீங்கள் உங்கள் வழியிலேயே உங்கள் காதல் கதையைச் சொல்லி முடியுங்கள்" என்றார் அம்மா. 'உங்கள் காதல் கதையை' என்று சொன்னபோது 'உங்கள்' என்ற வார்த்தைக்கு அவர் கொடுத்த அழுத்தம் பொருள் பொதிந்தது என்று எனக்குத் தோன்றியது.

அப்பா விடவில்லை. "இது என் காதல் கதை இல்லை என்று நான் எத்தனை தடவை சொல்வது?" என்றார்.

"கடவுளே!" என்றார் அம்மா. அதற்கு மேல் வேறு ஏதாவது சொன்னால் அப்பா அதைப் பிடித்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்தது போல் பேசாமல் இருந்தார்.

"ஒரு நாள் அவளுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு காதல் கடிதம்" என்று நிறுத்திய அப்பா, "யார் எழுதியது என்று கேட்க மாட்டாயா?" என்று மீண்டும் அம்மாவைச் சீண்டினார்.

அம்மா பேசாமல் இருந்தார். அப்பா அம்மாவின் மௌனத்தை ஒரு நிமிடம் ரசித்து விட்டுப் பிறகு தொடர்ந்தார். "குமார் என்று ஒரு பையன் ராதிகாவுக்கு எழுதிய கடிதம் அது."

"யார் அந்தக் குமார்?"

"இதைத் தான் நானும் ராதிகாவிடம் கேட்டேன். நீயும் நானும் எப்படி ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறோம் பார்!"

"ஏன் உங்களுக்கு அவனைத் தெரியாதா?"

"ஆச்சரியம். ராதிகா என்னிடம் கேட்ட அதே கேள்வியை நீயும் கேட்கிறாயே? 'எனக்குத் தெரியாது' என்றேன். 'என்னங்க இது? அவனும் நம் வகுப்புதான். ஆனால் B  செக்‌ஷன்' என்றாள் ராதிகா."

"நீங்கள் இருவரும் A செக்‌ஷனாக்கும்? ஆமாம் நீங்கள் இருவரும் ஒரே வகுப்புதானே? அப்புறம் ஏன் ராதிகா உங்களை 'என்னங்க' என்று சொல்ல வேண்டும். வா போ என்று சொல்ல மாட்டாளா?"

"ஓ! ஒரு மனைவி கணவனைக் கூப்பிடுவது போல் 'என்னங்க' என்று சொன்னாளே என்று யோசிக்கிறாயா? நான் அவளுக்கு டியூஷன் வாத்தியார் என்பதால் முதலிலிருந்தே என்னை அவள் 'வாங்க போங்க' என்றுதான் கூப்பிடுவாள்"

"சரி. புராணம் போதும். கதைக்கு வாருங்கள்."

"எனக்கு B செக்‌ஷனில் படிப்பவர்களை அவ்வளவாகத் தெரியாது என்றேன்."

"A செக்‌ஷனில் படிப்பவர்களை மட்டும் நன்றாகத் தெரியுமாக்கும்?"

"மறுபடியும் ராதிகா கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறாயே? நீதான் ராதிகா. ராதிகாதான் நீ!"

"இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?'

"மீதிக் கதையைச் சொல்ல வருகிறேன்!" என்று அப்பா பின்வாங்கினார்."A செக்‌ஷனில் படிக்கும் குமாருக்கு B செக்‌ஷனில் படிக்கும் உன்னை எப்படித் தெரியும்?' என்று கேட்டேன்"

"எல்லாப் பையன்களும் உங்களைப் போலவே இருப்பார்களா என்று ராதிகா கேட்டிருப்பாளே!" என்றார் அம்மா கிண்டலாக.

"அப்படியேதான் கேட்டாள்? இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? நீயும் எங்கள் வகுப்பில்தான் படித்தாயா? நான்தான் உன்னை கவனிக்காமல் இருந்து விட்டேனா?"

அம்மா பதில் சொல்லவில்லை. ஆனால் அப்பா பயந்து பின்வாங்கியதிலிருந்து அம்மா அப்பாவை எப்படி முறைத்திருப்பார் என்று என்னால் ஊகிக்க முடிந்தது!

"சரி. கதைக்கு வாருங்கள். குமாரின் காதல் கடிதம் பற்றி ராதிகா என்ன சொன்னாள்? அவளும் அவனைக் காதலிப்பதாகச் சொன்னாளா?"

"அதெப்படிச் சொல்லுவாள்? அவள்தான்..."

" 'அவள்தான் என்னைக் காதலித்தாளே' என்று சொல்ல வருகிறீர்களா?" அம்மாவின் குரலில் இப்போது உண்மையாகவே கோபம் இருந்தது.

"அதெப்படிச் சொல்லுவேன்? அவள் என்னை குருவாகத்தான் மதித்தாளே தவிர என் மீது காதல் கொள்ளவில்லையே!"

"பின்னே ஏன் 'அவள்தான்..' என்று ஆரம்பித்தீர்கள்?"

"அவள்தான் கணக்கில் வீக் ஆயிற்றே என்று சொல்ல வந்தேன்."

"அவள் கணக்கில் வீக் என்பதற்கும் குமாரின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாததற்கும் என்ன சம்பந்தம்?"

"ஏனெனில் குமார் கணக்கில் ரொம்ப ரொம்ப வீக். அவன் சாதாரணக் கூட்டலைக் கூடத் தப்புத் தப்பாகப் போடுவதைப் பார்த்து அவன் வகுப்பில் எல்லோரும் சிரிப்பார்களாம். கணக்கில் வீக்காக இருக்கும் ராதிகா என் மாதிரி ஒரு கணக்குப் புலியை விரும்புவாளே தவிரத் தன்னை விடக் கணக்கில் வீக் ஆக இருப்பவனை எப்படி விரும்புவாள்?"

"சுற்றிச் சுற்றி எங்கே வருகிறீர்கள்?" என்றாள் அம்மா எரிச்சலுடன்.

"கோபப்படாதே. ராதிகாவின் மனம் காதலில் ஈடுபடவில்லை. அந்த வயதில் வரும் அபத்தமான காதல் எண்ணங்களைக் குமார் போல் தப்புக் கணக்குப் போடுபவர்கள்தான் பெரிதாக எடுத்துக் கொள்வார்கள்!"

"அப்புறம் ஏன் அவள் குமாரின் காதல் கடிதத்தை தன் நோட்டுப் புத்தகத்தில்  வைத்திருந்தாளாம்?"

"அந்தக் கடிதத்தில் குமார் ஒரு தப்பான கூட்டல் கணக்குப் போட்டிருந்தான். அதைத் தன் நெருங்கிய தோழிகளிடம் காட்டி ரசிப்பதற்காகத்தான் அதை வைத்திருந்தாளாம்!"

"காதல் கடிதத்தில் கூட்டல் கழித்தல் எல்லாம் எங்கே வந்தது?"

"சொல்கிறேன். அந்தக் கடிதத்தில் அவன் எழுதி இருந்தான். 'என்காதல் நிறைவேற வேண்டும் என்று பிள்ளையார் கோவிலை இது வரை 18 முறை சுற்றி வந்து விட்டேன். இன்னும் 40 தடவை சுற்றி வந்தால் 108 முறை ஆகி விடும். அப்புறம் என் காதல் நிறைவேறி விடும்.'"

அம்மா பெரிதாகச் சிரித்தார். "இது தப்புக் கணக்கு போல் தோன்றவில்லை. ஏமாற்று வேலை போல் தோன்றுகிறது! நீங்கள் என்ன ஆலோசனை சொன்னீர்கள் உங்கள் சிஷ்யைக்கு?"

"அவளை அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போடச் சொன்னேன். அப்படிப்பட்ட கடிதங்களை வைத்திருப்பது ஆபத்தானது என்று சொன்னேன். அப்புறம் அவள் கிழித்துப் போடுவாளோ மாட்டளோ என்று நினைத்து நானே அதைக் கிழித்துப் போட்டு விட்டேன்."

"கதை முடிந்ததா?" என்றார் அம்மா கிண்டலாக.

"இன்னும் என்ன பாக்கி இருக்கிறது? ராதிகா யாரைக் கல்யாணம் செய்து கொண்டாள், குமார் யாரைக் கல்யாணம் செய்து கொண்டான், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்காதே! எனக்குத் தெரியாது."

"பெரிய கதாசிரியர்தான் நீங்கள்! காதல் கதை என்று ஆரம்பித்து விட்டு, அப்புறம் காதலே இல்லை என்று சொல்லி விட்டு, மறுபடியும் காதலைக் கொண்டு வந்து...... அடேயப்பா!"

"சரி. என் கதையை நான் சொல்லி விட்டேன். உன் கதையை நீ சொல்ல வேண்டாமா?"

"என்னிடம் இது போல் காதல் கதைகள் எல்லாம் இல்லை."

"நீ கல்லூரியில் படித்தபோது பாலு என்பவன் உனக்குக் காதல் கடிதம் கொடுத்தானே, அதைப் பற்றிச் சொல்லலாமே!" என்றார் அப்பா.

அம்மா அதிர்ச்சி அடைந்தவர் போல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "எனக்குக் காதல் கடிதம் கொடுத்தவன் பெயர் பாலு இல்லை, மணி"  என்றார்.

"அவன் பெயர் பாலசுப்ரமணியன் என்று இருந்திருக்கும். நான் பெயரின் முதல் பகுதியைச் சொன்னேன். நீ கடைசிப் பகுதியைச் சொல்கிறாய்!"

"இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? என் வீட்டில் யாராவது சொன்னார்களா என்ன?"

"யாரும் சொல்லவில்லை. உன்னைப் போல் அழகான பெண்ணுக்கு யாராவது ஒருவன் காதல் கடிதம் கொடுத்திருப்பான் என்ற ஊகத்தில்தான் கேட்டேன்!"

"நான் அழகாக இருப்பதாக இது வரை நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே?"

"கல்யாணம் ஆன புதிதில் சொல்லி இருக்கிறேனே, அதை மறந்து விட்டாயா?"

"அப்புறம் ஏன் சொல்லவில்லை?"

"தேவைப்பட்டால் ஒழியப் பொய் சொல்லக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  இரு, இரு! கோபித்துக் கொள்ளாதே. நான் உன்னைப் பற்றிச் சொன்னது எதுவுமே பொய் இல்லை.  உன் கதைக்கு வருவோம். மணி என்பவன் காதல் கடிதம் கொடுத்தான். அப்புறம் என்ன ஆயிற்று அவன் கதை?"

அம்மா இன்னும் கோபம் தணியாமல் மௌனமாகவே இருந்தார். அப்பா தொடர்ந்து, "கல்யாணப் பரிசு திரைப்படத்தில் சரோஜா தேவி செய்தது போல உன் கல்லூரி முதல்வரிடம் சொல்லி இருப்பாய். அவரும், திரைப்படத்தில் கல்லூரி முதல்வர் ஜெமினி கணேசனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றியது போல் மணியை வெளியேற்றி இருப்பார். அப்படித்தானே?"

"நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. கடிதத்தைக் கொண்டு போய் என் அப்பாவிடம் கொடுத்தேன்."

"அவர் என்ன செய்தார்?"

"பொறுமையாகக் கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு, 'இதெல்லாம் வயசுக் கோளாறு. அந்தப் பையனைத் திரும்பியே பார்க்காமல் உன் வேலையைப் பார். அவன் தானாகவே ஒதுங்கி விடுவான்' என்றார். அப்படியே செய்தேன். அவனும் அப்பா சொன்னது போலத் தானாகவே ஒதுங்கி விட்டான்."

"உன் அப்பா கிரேட்!" என்றார் அப்பா.

"என் அப்பாவாயிற்றே?" என்றார் அம்மா.

"என்னை உனக்குக் கணவனாகத் தேர்வு செய்தாரே அதற்காகச் சொன்னேன்!"

அம்மா எதுவும் பதில் சொல்வதற்கு முன், "ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு விதம். எத்தனை விதமான அப்பாக்கள்! அப்பப்பா!" என்று முடித்தார் அப்பா.

Friday, May 15, 2015

3. தொலைக்காட்சிப் பெட்டியும் தொலைநோக்குப் பார்வையும்

ஒரு வீட்டு உபயோகப் பொருள் வாங்குவது என்றால் அப்பாவுக்கு அது ஒரு பிராஜக்ட்! அதாவது திட்டமிட்டுச் செய்ய வேண்டிய ஒரு பணி. நினைத்தால் உடனே வாங்கி விடுவது என்ற பழக்கம் அவரிடம் இல்லை.

இப்போது எங்கள் தலைமுறையில், நினைத்தால் உடனே போய் ஒரு கைபேசியை வாங்கிக் கொண்டு வருவது,  அப்புறம் 'ஏன் இதை வாங்கினோம், வேறு மாடலை வாங்கி இருக்கலாமே!' என்று நினைத்து வருந்துவது என்றெல்லாம் நடக்கும்போது, அப்பாவின் அணுகுமுறை என் நினைவுக்கு வரும்.

அதை என் போன்றோரால் பின்பற்ற முடியாது என்பது வேறு விஷயம். ஏன் என்று கேட்டு விடாதீர்கள். என்னால் காரணம் சொல்ல முடியாது. அப்பா அப்பாதான்! அவர் காலத்திலேயே அவர் போலத் திட்டமிட்டு வாங்கியவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்திருப்பார்கள். அவசரமாக எதையாவது வாங்கி விட்டு வீட்டில் திட்டு வாங்கியவர்கள்தான் அதிகம் இருந்திருப்பார்கள்!

அப்பா எப்போதுமே அவசரப்பட மாட்டார். உதாரணமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது என்று முடிவு செய்தால், உடனே கடைக்குப் போய் வாங்கி விட மாட்டார். முதலில் பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து என்னென்ன மாடல்கள் உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்றெல்லாம் பார்ப்பார்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான  விளம்பரங்கள் அதிகம் வரும் என்பதால் அவற்றை விரிவாகப் படிப்பார். சில கடைகளுக்கு ஃபோன் செய்து விசாரிப்பார்.

பெரும்பாலான கடைகளில் "நேர்ல வாங்க சார். விவரமா சொல்றோம்" என்று சொல்லி வெட்டி விட்டு விடுவார்கள். ஆயினும் இதனால் அப்பா சோர்வடைந்து விட மாட்டார். வேறொரு கடைக்கு ஃபோன் செய்வார்.

விளம்பரங்களை எங்களிடம் காட்டி எந்த மாடல் நமக்கு உகந்தது என்று கருத்துக் கேட்பார். நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வார். சில வசதிகள் நமக்குத் தேவைதானா என்று விவாதிப்பார்.

நாங்கள் புதிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்குவது என்று முடிவு செய்தபோது இப்படித்தான் நடந்தது.

அம்மா முதலிலேயே சொன்னார். "டிவி வாங்குவதுன்னு இன்னிக்குத்தானே முடிவு பண்ணியிருக்கோம்? உங்க அப்பா ஆராய்ச்சி பண்ணி டிவி வாங்குவதற்குள் ஒரு மாதம் ஆகி விடும்!"

அப்போது படத்துக்குள் படம் (picture in picture) என்று ஒரு வசதி சில தொலைக்காட்சி மாடல்களில் இடம் பெற்றிருந்தது. அது ஒரு கவர்ச்சியான அம்சம் என்பதால் பலர் அந்த மாடல்களை விரும்பி வாங்கினர்

என்அக்கா கூட, "அப்பா! இது ரொம்ப நல்லா இருக்குப்பா. இதை வாங்கலாம்" என்றாள். அப்பா கொஞ்சம் யோசித்து விட்டு, "இது பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் நமக்கு உபயோகமாக இருக்குமா? ஏதோ கொஞ்ச நேரம் சுவாரசியமாக இருக்கும். அப்புறம் அலுப்புத் தட்டி விடும். ஒரே நேரத்தில் இரண்டு சானல்கள் பார்க்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூடப் பெட்டிக்குள் இருக்கும் காட்சி மிகச் சிறிதாக இருக்கும். அதோடு ஆடியோ ஒரு சானலில்தான் கேட்க முடியும்" என்று சொன்னார்.

அக்காவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அப்பா சொல்வதை ஏற்றுக்கொண்டு விட்டாள்.

அதுபோல் கம்ப்யூட்டராகவும் செயல் படக்கூடிய டூ இன் ஒன் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று புதிதாக அறிமுகப்பட்டிருந்தது. சிறுவனான எனக்கு அதில் ஆர்வம் இருந்தது.

அப்போது  வீடுகளில் கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ளும் வசதி வரவில்லை. பெரிய ஸ்க்ரீன்  கொண்ட அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் வீட்டுக் கணக்குப் போடுவது, விளையாட்டுக்கள் விளையாடுவது என்ற விஷயங்களைக் கடையில் டெமோவில் பார்த்தபோது நாங்கள் எல்லோருமே பிரமித்து விட்டோம்.

விலை சற்று அதிகம் இருந்தாலும் அதையே வாங்கலாம் என்றார் அம்மா. "என்ன சார், ஆயிரம் ரூபாய் கட்டி புக் பண்ணிக்கிறீங்களா? வீட்டுல கொண்டு வச்சு டெமோ காட்டறோம். அப்ப மீதிப் பணத்தைக் கொடுத்தாப் போதும். இன்ஸ்டால்மென்ட் வசதி கூட இருக்கு" என்றார் கடை ஊழியர்.

"இல்லை. மறுபடி வருகிறோம்." என்று சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார் அப்பா.

வீட்டுக்குப் போனதும் அப்பா ரொம்ப நேரம் யோசித்தார். அப்பாவுக்கும் இந்த மாடல் பிடித்து விட்டது போலிருக்கிறது என்று நினைத்து அதை வாங்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன்.

அப்பா தன் முடிவை அடுத்த நாள்தான் சொன்னார். 

"கண்ணா! நீ இந்த டிவியை வாங்க ஆசைப்படறேன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்த மாதிரி டூ இன் ஒன் எந்த அளவுக்கு சரியா வரும்னு எனக்குத் தெரியல. டேப் ரிகார்டர் கம் ரேடியோ என்கிற டூ இன் ஒன் வேறே. அதில ரெண்டுமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது. ஆனா டிவி வேற, கம்ப்யூட்டர் வேற. ரெண்டையும் ஓரே  பொட்டிக்குள்ள வச்சுப் பயன்படுத்தறது நமக்குச் சரியா வராதுன்னு நெனைக்கறேன். நீ பெரியவனா ஆறதுக்குள்ள கம்ப்யூட்டர்ல நிறைய முன்னேற்றங்கள் வரும். கம்ப்யூட்டரைத் தனியா வாங்கிப் பயன்படுத்தற வசதி வரும். அதனால இந்த டிவி கம் கம்ப்யூட்டர் வேண்டாம்னு நினைக்கிறேன்" என்றார்.

"பையன் ஆசைப்படறான். வாங்கிக் குடுங்களேன்" என்றார் அம்மா.

"இல்லேம்மா. அப்பா சொல்றது சரிதான்னு எனக்குத் தோணுது" என்றேன் நான்.

"நீங்கள் எல்லாம் என்னைப் புரிஞ்சுக்கறதுதான் எனக்குப் பெரிய பலம்" என்றார் அப்பா.

அவர் கணித்தது போலவே கணிப்பொறித் தொலைக்காட்சி கொஞ்ச நாட்களில் காணாமல் போனது. அந்த மாடலை வாங்கியவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

இதன் பிறகு பல மாடல்களைப் பார்த்த பிறகு சரௌண்ட் சவுண்ட் என்று புதிதாக வந்த மாடலை நாங்கள் அனைவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தோம். 

"இதை விட நவீன மாடல்கள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் சரௌண்ட் சவுண்ட் என்ற வசதி எப்போதும் காலாவதியாயாகாது" என்றார் அப்பா.

அம்மா சொன்னது போலவே, நாங்கள் தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடிவு செய்ததிலிருந்து ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்து  வாங்குவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்டது!

அப்பா சொன்னது போலவே அந்த சரௌண்ட் சவுண்ட் வசதி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி பல வருடங்கள் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

Friday, May 8, 2015

2. இளநீர்

அப்பா எப்போதுமே பார்ப்பதற்கு எளிமையாக இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் எவருமே அவர் வசதியற்ற, அதிகம் படிக்காத, ஒரு சாதாரண மனிதர் என்றுதான் நினைப்பார்கள். 

எப்போதுமே ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் உள்ளவர்கள் கூட அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியாதோ என்று நினைத்து அவரிடம் தமிழில் பேசுவார்கள். அவர்களுக்கு பதில் கூறும்போது,  அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசித் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ள அப்பா எப்போதுமே முயற்சி செய்ததில்லை.

அப்போது நான் சிறு பையன். அப்பாவோடு அவரது நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்பாவின் நண்பர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்பாவின் நண்பரின் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவரது அறை இருக்கும் பகுதிக்கு வந்தபோது, அங்கே இருந்த ஒரு பியூன் அப்பா ஏதோ நன்கொடை கேட்க வந்திருப்பாரோ என்று நினைத்தது போல் அப்பாவிடம் வெகு அலட்சியமாக நடந்து கொண்டார்.

வயதில் பெரியவரான அப்பாவை 'வா, போ' என்று மரியாதையில்லாமல் பேசினார்.  

"சார் ஃபோன்ல பேசிக்கிட்டிருக்கார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு" என்றவர் எங்களை உட்காரக் கூடச் சொல்லவில்லை. அங்கே நாற்காலிகள் இருந்தும் அப்பா உட்காராமல் நின்று கொண்டிருந்தார்.

சற்று நேரம் கழித்து அப்பாவின் நண்பர் அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அப்பாவைப் பார்த்து உற்சாகத்துடன், "வாடா! எப்ப வந்தே?" என்றார்.

 அப்பா, "என்னடா, சி எம்மைக் கூடப் பாத்துடலாம் போலிருக்கு! உன்னைப் பார்க்க முடியாது போலிருக்கே?" என்றார்.

"ஏன் ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா என்ன?" என்றார் நண்பர்.

 "இல்லை, இப்பத்தான் உள்ளே நுழையறோம். சும்மாதான் சொன்னேன்" என்றார் அப்பா.

உள்ளே போய் உட்கார்ந்ததும், "என்ன சாப்பிடறே? காப்பி சொல்லட்டுமா? பையனுக்கு வேணும்னா ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன்" என்றார் அவர்.

"பரவாயில்லை. நான் காப்பி சாப்பிடறதில்லை" என்றார் அப்பா.

"வேறே என்ன சாப்பிடுவே?"

"பரவாயில்லை விடுடா!"

"சொல்லுடா!" என்றார் நண்பர் விடாமல்.

"நான் இளநீர்தான் சாப்பிடுவேன். அது இங்கே கிடைக்காது போலிருக்கே! இது சீஸன் வேறே இல்லை" என்றார் அப்பா.

"அதைப்பத்தி உனக்கென்ன? நான் வாங்கிக்கிட்டு வரச் சொல்றேன்" என்ற நண்பர், பியூனை அழைத்து, "மூணு இளநீர் வாங்கிக்கிட்டு வா" என்றார்.

"சார், பக்கத்தில எங்கேயும் இளநீர் கிடைக்காதே!"

"எங்கே கிடைக்குமோ அங்கே போய் வாங்கிட்டு வா."

அரைமணி நேரம் கழித்து இளநீர் வந்தது. பியூனின் முகத்தில் வழிந்த வியர்வை அவர் வெகு தூரம் போய் அலைந்திருப்பார் என்று காட்டியது.
சற்று நேரம் நண்பரிடம் பேசி விட்டு விடை பெற்று வெளியே வந்தோம்.

வெளியே நின்று கொண்டிருந்த பியூன் அப்பாவைச் சற்று தர்மசங்கடத்துடன் பார்த்தார். அப்பா அவரிடம், "இளநீர் ரொம்ப நல்லா இருந்தது" என்று சொல்லி விட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார். "நீயும் ஒரு இளநீர் சாப்பிடு!" என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.

வெளியே வந்ததும், அப்பாவிடம், "அப்பா! உனக்குத்தான்* காப்பி பிடிக்குமே? ஏன் காப்பி சாப்பிட மாட்டேன்னு சொன்னே?" என்றேன்.

"அந்த பியூனுக்கு நான் அவன் முதலாளிக்கு எவ்வளவு நெருக்கம்னு காட்டறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். காப்பி என்றால் பக்கத்தில் எங்காவது ஓட்டலிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பான். வரும்போதே கவனித்தேன். இளநீர்க்கடை எதுவுமே கண்ணில் படவிலை. அதனால்தான் கொஞ்சம் அலையட்டும்னு இளநீர் கேட்டேன்" என்றார் அப்பா.

"அப்புறம் ஏன் அவருக்கு அம்பது ரூபாய் குடுத்தே?"

"பாவம். இவ்வளவு தூரம் அலஞ்சிருக்கானே அதுக்காகத்தான். அந்தப் பணத்தில் அவன் இளநீர் வாங்க மாட்டான். அவனைப் பார்த்தா குடிப்பழக்கம் இருக்கிறவன் மாதிரி தெரியலே. அதனால் அந்தப் பணம் அநேகமா அவன் குடும்பத்துக்குப் போகலாம். குழந்தை இருந்தால் பிஸ்கட், சாக்லேட் ஏதாவது வாங்கிக் குடுப்பான்" என்றார் உலகம் அறிந்த அப்பா.

*அப்பாவை 'வா போ' என்று அழைப்போர் உண்டு, 'வாங்க போங்க' என்று அழைப்போரும் உண்டு. இந்த அப்பா, தன் பிள்ளைகள் தன்னை 'வா போ' என்று அழைப்பதையே விரும்புவார்!


Thursday, May 7, 2015

1. யாரப்பா இவர்?

'அப்பா கதைகள்' என்ற தலைப்பைப் படிக்கும்போது இந்தக் 'கதைகள்' குறித்துப் பலவித யூகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

1) 'அப்பா' என்ற புனைபெயரைக் கொண்டவர் எழுதிய கதைகள்

2) அப்பா சொன்ன கதைகள் (யாருடைய அப்பா? இந்த வலைப் பதிவை எழுதுபவரின் அப்பாவாக இருக்கலாம்!)

3) அமரர் தேவன் 'மல்லாரி ராவ் கதைகள்' என்று ஒரு தொடரை எழுதினார். அதுபோல், இது 'அப்பா' என்ற பெயர் உடையவரை(அப்பாசாமி, அப்பாத்துரை, அப்பாராவ் போன்ற ஒரு பெயரின் சுருக்கமாக இருக்கலாம்)ப் பற்றிய கதைகளாக இருக்கலாம்.

4 (அடே) 'அப்பா!' என்று வியக்க வைக்கும் கதைகள்

5) (போதும்) 'அப்பா' என்று அலுக்க வைக்கும் கதைகள்

6) பல்வேறு அப்பாக்களின் கதைகள்

இதற்கு மேலும் கற்பனை செய்வது உங்கள் திறமை.

இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் கதைகள் மேற்கண்ட எந்த வகையையும் சேர்ந்த கதைகள் இல்லை என்று சொல்லலாம். மேற்கண்ட எல்லா வகைகளையும் உள்ளடக்கிய கதைகள் என்றும் சொல்லலாம்.

இந்தக் கதைகள் ஒரு கற்பனை அப்பாவைப் பற்றியவை.  இந்தக் கதைகளில் வரப்போகும் அப்பா என் அப்பா இல்லை. ஒரு அப்பாவி அப்பாவாகிய நானும் இல்லை.  வேறு எவர் அப்பாவும் இல்லை.

இந்த அப்பா நேர்மை, அறிவுக் கூர்மை, அன்பு, இரக்கம், தெளிவு, பொறுமை போன்ற பல்வகை நற்பண்புகள் நிறைந்த ஒரு அப்பா. அத்துடன் சாமர்த்தியம் மிகுந்தவர். ஒரு ஸ்மார்ட் (smart) அப்பா. இவரிடம் சில சமயம் உங்கள் அப்பாவின் சாயல் தோன்றலாம். உங்கள் சாயல் கூடத் தோன்றலாம்!

ஒரு அப்பா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று போதனை செய்வது இந்தக் கதைகளின் நோக்கம் இல்லை. சில சமுதாய நிகழ்வுகளையும் அவற்றை இந்த அப்பா எப்படி எதிர் கொள்கிறார் என்பதையும் சற்றே நகைச் சுவையுடன் விவரிக்கும் ஒரு முயற்சி தான் இது.

'முயற்சி திருவினையாக்கும் என்பது என் அப்பனின் வாக்கு' என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்!