Friday, May 15, 2015

3. தொலைக்காட்சிப் பெட்டியும் தொலைநோக்குப் பார்வையும்

ஒரு வீட்டு உபயோகப் பொருள் வாங்குவது என்றால் அப்பாவுக்கு அது ஒரு பிராஜக்ட்! அதாவது திட்டமிட்டுச் செய்ய வேண்டிய ஒரு பணி. நினைத்தால் உடனே வாங்கி விடுவது என்ற பழக்கம் அவரிடம் இல்லை.

இப்போது எங்கள் தலைமுறையில், நினைத்தால் உடனே போய் ஒரு கைபேசியை வாங்கிக் கொண்டு வருவது,  அப்புறம் 'ஏன் இதை வாங்கினோம், வேறு மாடலை வாங்கி இருக்கலாமே!' என்று நினைத்து வருந்துவது என்றெல்லாம்நடக்கும்போது, அப்பாவின் அணுகு முறை நினைவுக்கு வரும்.

அதை என் போன்றோரால் பின்பற்ற முடியாது என்பது வேறு விஷயம். ஏன் என்று கேட்டு விடாதீர்கள். என்னால் காரணம் சொல்ல முடியாது. அப்பா அப்பாதான்! அவர் காலத்திலேயே அவர் போலத் திட்டமிட்டு வாங்கியவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்திருப்பார்கள். அவசரமாக எதையாவது வாங்கி விட்டு வீட்டில் திட்டு வாங்கியவர்கள்தான் அதிகம் இருந்திருப்பார்கள்!

அப்பா எப்போதுமே அவசரப்பட மாட்டார். உதாரணமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது என்று முடிவு செய்தால் உடனே கடைக்குப் போய் வாங்கி விட மாட்டார். முதலில் பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து என்னென்ன மாடல்கள் உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்றெல்லாம் பார்ப்பார்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான  விளம்பரங்கள் அதிகம்  வரும் என்பதால் அவற்றை விரிவாகப் படிப்பார். சில கடைகளுக்கு ஃபோன் செய்து விசாரிப்பார்.

பெரும்பாலான கடைகளில் "நேர்ல வாங்க சார். விவரமா சொல்றோம்" என்று சொல்லி வெட்டி விட்டு விடுவார்கள். ஆயினும் இதனால் அப்பா சோர்வடைந்து விட மாட்டார். வேறொரு கடைக்கு ஃபோன் செய்வார்.

விளம்பரங்களை எங்களிடம் காட்டி எந்த மாடல் நமக்கு உகந்தது என்று கருத்துக் கேட்பார். நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வார். சில வசதிகள் நமக்குத் தேவைதானா என்று விவாதிப்பார்.

நாங்கள் புதிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்குவது என்று முடிவு செய்தபோது இப்படித்தான் நடந்தது.

அம்மா முதலிலேயே சொன்னார். "டிவி வாங்குவதுன்னு இன்னிக்குத்தானே முடிவு பண்ணியிருக்கோம்? ஒங்க அப்பா ஆராய்ச்சி பண்ணி டிவி வாங்குவதற்குள் ஒரு மாதம் ஆகி விடும்!"

அப்போது  படத்துக்குள் படம் (picture in picture) என்று ஒரு வசதி சில தொலைக்காட்சி மாடல்களில் இடம் பெற்றிருந்தது. அது ஒரு கவர்ச்சியான அம்சம் என்பதால் பலர் அந்த மாடல்களை விரும்பி வாங்கினர்

என் அக்கா கூட, "அப்பா! இது ரொம்ப நல்லா இருக்குப்பா. இதை வாங்கலாம்" என்றாள். அப்பா கொஞ்சம் யோசித்து விட்டு, "இது பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் நமக்கு உபயோகமாக இருக்குமா? ஏதோ கொஞ்ச நேரம் சுவாரசியமாக இருக்கும். அப்புறம் அலுப்புத் தட்டி விடும். ஒரே நேரத்தில் இரண்டு சானல்கள் பார்க்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூடப் பெட்டிக்குள் இருக்கும் காட்சி மிகச் சிறிதாக இருக்கும். அதோடு ஆடியோ ஒரு சானலில்தான் கேட்க முடியும்" என்று சொன்னார்.

அக்காவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அப்பா சொல்வதை ஏற்றுக்கொண்டு விட்டாள்.

அதுபோல் கம்ப்யூட்டராகவும் செயல் படக்கூடிய டூ இன் ஒன் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று புதிதாக அறிமுகப்பட்டிருந்தது. சிறுவனான எனக்கு அதில் ஆர்வம் இருந்தது.

அப்போது  வீடுகளில் கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ளும் வசதி வரவில்லை. பெரிய ஸ்க்ரீன்  கொண்ட அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் வீட்டுக் கணக்குப் போடுவது, விளையாட்டுக்கள் விளையாடுவது என்ற விஷயங்களைக் கடையில் டெமோவில் பார்த்தபோது நாங்கள் எல்லோருமே பிரமித்து விட்டோம்.

விலை சற்று அதிகம் இருந்தாலும் அதையே வாங்கலாம் என்றார் அம்மா. "என்ன சார், ஆயிரம் ரூபாய் கட்டி புக் பண்ணிக்கிறீங்களா? வீட்டுல கொண்டு வச்சு டெமோ காட்டறோம். அப்ப மீதிப் பணத்தைக் கொடுத்தாப் போதும். இன்ஸ்டால்மென்ட் வசதி கூட இருக்கு" என்றார் கடை ஊழியர்.

"இல்லை. மறுபடி வருகிறோம்." என்று சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார் அப்பா.

வீட்டுக்குப் போனதும், ரொம்ப நேரம் யோசித்தார். அப்பாவுக்கும் இந்த மாடல் பிடித்து விட்டது போலிருக்கிறது என்று நினைத்து அதை வாங்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன்.

அப்பா தன் முடிவை அடுத்த நாள்தான் சொன்னார். "கண்ணா! நீ இந்த டிவியை வாங்க ஆசைப்படறேன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்த மாதிரி டூ இன் ஒன் எந்த அளவுக்கு சரியா வரும்னு எனக்குத்  தெரியல. டேப் ரிகார்டர்  கம் ரேடியோ என்கிற டூ இன் ஒன் வேறே. ரெண்டுமே ஒண்ணுக்கொண்னு தொடர்புடையது. ஆனா டிவி வேற. கம்ப்யூட்டர் வேற. ரெண்டையும் ஓரே  பொட்டிக்குள்ள வச்சுப் பயன்படுத்தறது நமக்குச் சரியா வராதுன்னு நெனைக்கறேன்.  நீ பெரியவனா ஆறதுக்குள்ள கம்ப்யூட்டர்ல நெறைய முன்னேற்றங்கள் வரும். கம்ப்யூட்டரைத் தனியா வாங்கிப் பயன்படுத்தற வசதி வரும். அதனால இந்த டிவி கம் கம்ப்யூட்டர்  வேண்டாம்னு நெனக்கறேன்" என்றார்.

"பையன் ஆசைப் படறான். வாங்கிக் குடுங்களேன்" என்றார் அம்மா.

"இல்லேம்மா. அப்பா சொல்றது சரிதான்னு எனக்குத் தோணுது" என்றேன் நான்.

"நீங்கள் எல்லாம் என்னைப் புரிஞ்சுக்கறதுதான் எனக்குப் பெரிய பலம்" என்றார் அப்பா.

அவர் கணித்தது போலவே கணிப்பொறித் தொலைக்காட்சி கொஞ்ச நாட்களில் காணாமல் போனது. அந்த மாடலை வாங்கியவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

இதன் பிறகு பல மாடல்களைப் பார்த்த பிறகு சரௌண்ட் சவுண்ட் என்று புதிதாக வந்த மாடலை நாங்கள் அனைவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தோம். "இதை விட நவீன மாடல்கள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் சரௌண்ட் சவுண்ட் என்ற வசதி எப்போதும் காலாவதியாயாகாது" என்றார் அப்பா.

அம்மா சொன்னது போலவே, நாங்கள் தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடிவு செய்ததிலிருந்து ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்து  வாங்குவதற்குக்  கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்டது!

அப்பா சொன்னது போலவே அந்த சரௌண்ட் சவுண்ட் வசதி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி பல வருடங்கள் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.


No comments:

Post a Comment