Friday, June 5, 2015

4. காதல் என்பது எதுவரை?

இந்தக் கதை எனக்குத் தெரியும் என்பது அப்பாவுக்குத் தெரியாது. ஒரு சமயம் நான் தூங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுத்தான் நான் இதை அறிந்து கொண்டேன்.

அப்பா ஒரு வாரப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். அதில் வந்திருந்த கேள்வி-பதில்' பகுதியில் தான் படித்த ஒரு சுவாரசியமான விஷயத்தை அப்பா அம்மாவிடம் சொல்லி ரசிக்க விரும்பினார். அதனால் வம்பில் மாட்டிக்கொண்டார்!

"இங்கே பார்த்தாயா 'நீங்கள் இள வயதில் காதலித்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கும் பதிலை? 'ஜலதோஷம் பிடிக்காத மூக்கு, சிரங்கு வராத சருமம், காதல் வயப்படாத இளமை இவை மூன்றும் இல்லவே இல்லை!' என்று பதில் சொல்லி இருக்கிறார். எவ்வளவு உண்மை?"

"எவ்வளவு உண்மையா? அப்படியானால் நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?" என்று பிடித்துக் கொண்டார் அம்மா.

"நான் காதலைப் பற்றிச் சொல்லவில்லை. மற்ற இரண்டையும் பற்றிச் சொன்னேன்" என்றார் அப்பா.

"சமாளிக்காதீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். உங்களை நான் ஒன்றும் விவாகரத்து செய்து விட மாட்டேன்" என்றார் அம்மா.

"அப்படியெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்து விடுமா என்ன?" என்று அப்பா சொன்னது எனக்கு மட்டும் கேட்டது. அம்மாவுக்கு நிச்சயமாகக் கேட்டிருக்காது!

"நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வகுப்பில் படித்த ஒரு பெண் கணக்கில் மிகவும் பலவீனமாக இருந்தாள். நான் கணக்கில் நிறைய மதிப்பெண்கள் வாங்குவேன். அவள் அப்பாவும்  என் அப்பாவும் சிறு வயது முதலே நண்பர்கள். அவள் அப்பா என் அப்பாவிடம் கேட்டுக் கொண்டதால் என் அப்பா என்னை அவளுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னார்."

"அவள் பெயர் என்ன?"

"ராதிகா."

"அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட மாடர்ன் பெயர்கள் எல்லாம் வைத்திருக்கிறார்களே! அவள் எப்படி இருப்பாள்? அழகாக இருப்பாளா?"

"இங்கே பார். அந்த வயதில் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் அழகாக இருப்பாளா என்றெல்லாம் நினைக்கத் தோன்றாது."

"ஏன், சினிமா நடிகைகளைப் பார்த்து அழகு, அழகில்லை என்றெல்லாம் அந்த வயதில் நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசிக் கொண்டதில்லையா? சரி. பரவாயில்லை. மேலே சொல்லுங்கள்."

"நான் என்ன கதையா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? தினமும் மாலையில் அவள் என் வீட்டுக்கு வருவாள். எங்கள் வீட்டில் இருட்டாக ஒரு அறை இருக்கும். அதற்குக் காமரா உள் (அறை) என்று பெயர். அப்போது எங்கள் வீட்டில் மின்சார விளக்குக் கூடக் கிடையாது. அந்த அரை இருட்டில்தான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே! அந்த அறைக் கதவு திறந்துதான் இருக்கும். கதவு திறந்திருந்தால்தான் கூடத்திலிருந்து கொஞ்சமாவது வெளிச்சம் வரும்! அறைக்கு நேர் வெளியே யாராவது உட்கார்ந்து கொண்டோ நடமாடிக்கொண்டோதான் இருப்பார்கள். அன்றன்றைக்கு வகுப்பில் ஆசிரியர் போட்ட கணக்குகளை அவளுக்குப் புரியும்படியாகப் போட்டுக் காட்டுவேன். அவ்வளவுதான்."

"ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கிளாஸ்?"

"அரை மணி நேரம் இருக்கும். அதற்குள் இருட்டி விடும். அதற்குள் அநேகமாக அன்று வகுப்பில் போடப்பட்ட கணக்குகள் எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பேன்."

"கணக்கு வாத்தியார் சொல்லிக் கொடுத்தபோது புரியாதது நீங்கள் சொல்லிக் கொடுத்தபோது புரிந்ததாக்கும்!"

"அப்படித்தான் அவள் தன் அப்பாவிடம் சொல்லி இருக்கிறாள். அதை அவர் என் அப்பாவிடம் வந்து சொன்னார். அதோடு காலாண்டுத் தேர்வில் கணக்கில் ஃபெயில் மார்க் வாங்கியவள் அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள். அவள் அப்பாவுக்கு ரொம்பவும் சந்தோஷம். 'இதற்கு நீதாண்டா காரணம்' என்று என்னை நேரடியாகப் பாராட்டினார். எனக்கு நன்றி கூடச் சொன்னார்."

"உங்கள் அப்பா என்ன சொன்னார்?"

"என் அப்பா சொன்னதுதான் என் மனதை மிகவும் நோகடித்து விட்டது."

"அப்படி என்ன சொன்னார்? 'என் பிள்ளைக்கே கணக்கு வராது. அவன் சொல்லிக் கொடுத்து உன் பெண் கணக்கில் தேறி விட்டாள் என்றால், உன் பெண்தான் புத்திசாலியாக இருக்க வேண்டும்' என்று சொன்னாரா?"

"பக்கத்தில் நின்று கேட்டது போல் சொல்லுகிறாய்! ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லயே!"

"வேறு எப்படிச் சொன்னார்? சீக்கிரம் சொல்லித் தொலையுங்கள். ஏன் இப்படி சஸ்பென்ஸ் வைத்து என் கழுத்தை அறுக்கிறீர்கள்?"

"நீதான் நான் சொல்வதற்குள் குறுக்கே பேசி, இப்படிச் சொன்னாரா, அப்படிச் சொன்னாரா என்று கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தாய்!"

"கன்னத்தில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்கிறேன். இனிமேலும் என்னால் சஸ்பென்ஸைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சீக்கிரம் சொல்லுங்களேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தார் அம்மா.

"கன்னத்தில் போட்டுக் கொண்டால் போதாது. தோப்புக் கரணம் போட வேண்டும், 108 தடவை. சரி சரி, அழுது விடாதே. சொல்லி விடுகிறேன். என் அப்பா என்ன சொன்னார் என்றால்..." என்று அப்பா நிறுத்தினார்.

அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்.

"அப்பா என்ன சொன்னார் என்றால், 'இதற்கு ஏன் நன்றி எல்லாம் சொல்கிறாய்? இவனுக்கு ஒரு தங்கை இருந்தால் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டானா?' என்றார்!" என்று முடித்தார் அப்பா.

சற்று முன்பு வரை இருந்த இறுக்கம் உடைந்து அம்மா பெரிதாகச் சிரித்தார். "அடப்பாவமே! ஜெமினி-சாவித்திரி போல் காதல் ஜோடியாக இருந்த உங்களை சிவாஜி-சாவித்திரி மாதிரி அண்ணன் தங்கைகளாக மாற்றி விட்டாரே உங்கள் அப்பா! அதனால்தான் காதல் மன்னர் மனம் நொந்து போய் விட்டீர்களோ?"

"நான் மனம் நொந்தது அதற்காக இல்லை. நான் கஷ்டப்பட்டு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவளும் கற்றுக் கொண்டு நிறைய மார்க் வாங்கி இருக்கிறாள். இதற்காக அவள் அப்பா என்னைப் பாராட்டினால், அதற்கு நான் தகுதி இல்லாதவன் என்கிற மாதிரி சொல்லி விட்டாரே என் அப்பா என்பதுதான் எனக்கு வருத்தம்."

"இந்த அப்பாக்களே அப்படித்தான்!"

"இரைந்து பேசாதே. நம் பையன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு நீ சொன்னது அவன் காதில் விழுந்து விடப் போகிறது" என்றார் அப்பா. அப்பாவின் நகைச்சுவை உணர்வைக் கண்களை மூடியபடியே ரசித்தேன்.

"அது சரி, உங்கள் அப்பா உங்களை அண்ணன் தங்கை என்று பேசிய பிறகுமா நீங்கள் அந்தப் பெண்ணைக் காதலித்தீர்கள்?" என்றார் அம்மா, கதையின் மையக்கருத்தை மறக்காமல்.

"இரண்டு விஷயம்" என்றார் அப்பா பொறுமையாக. அப்பா பொறுமையாகப் பேசினால் அவர் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுகிறார் என்று அர்த்தம்!

"முதல் விஷயம் - என் அப்பா ஒரு பேச்சுக்கு அந்தப் பெண்ணை என் தங்கை போல் என்று சொன்னதால் நாங்கள் அண்ணன் தங்கை ஆகி விட மாட்டோம்!"

"ஓ! இப்படி ஒரு நியாயமா?"

"நான் சொல்வதை முழுவதுமாகக் கேள்" என்றார் அப்பா. இப்போது அவர் "பொறுமை" இன்னும் சற்று அதிகரித்திருந்தது! "இரண்டாவது விஷயம் - எங்களுக்குள் கடைசி வரை ஒரு காதலும் வரவில்லை."

"அப்படியானால், ஏன் இதைக் காதல் கதை என்று சொன்னீர்கள்?" என்றார் அம்மா ஏமாற்றத்துடன்.

"நான் எப்போது சொன்னேன்? முதலிலிருந்தே நான் யாரையும் காதலிக்கவில்லை என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? நீதான் நம்பாமல் 'சொல்லுங்கள்,' 'சொல்லுங்கள்' என்றாய்!"

"அப்புறம் ஏன் இந்தக் கதையைச் சொன்னீர்கள்?"

"நீதானே காதல் கதை கேட்டாய்?"

"அதுதான் உங்களுக்குள் காதல் வரவேயில்லை என்று சொன்னீர்களே?"

"எனக்குக் காதல் வராவிட்டால் என்ன? கதையில் காதல் வருகிறதே! நான் கதையை முழுவதுமாகச் சொல்வதற்குள் நீ அவசரப் பட்டால் நான் என்ன செய்வது?"

அம்மாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து மௌனமாக இருந்தார்.

"என்ன பதிலையே காணோம்?" சீண்டினார் அப்பா!

"நீங்கள் உங்கள் வழியிலேயே உங்கள் காதல் கதையைச் சொல்லி முடியுங்கள்" என்றார் அம்மா. 'உங்கள் காதல் கதையை' என்று சொன்னபோது 'உங்கள்' என்ற வார்த்தைக்கு அவர் கொடுத்த அழுத்தம் பொருள் பொதிந்தது என்று எனக்குத் தோன்றியது.

அப்பா விடவில்லை. "இது என் காதல் கதை இல்லை என்று நான் எத்தனை தடவை சொல்வது?" என்றார்.

"கடவுளே!" என்றார் அம்மா. அதற்கு மேல் வேறு ஏதாவது சொன்னால் அப்பா அதைப் பிடித்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்தது போல் பேசாமல் இருந்தார்.

"ஒரு நாள் அவளுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு காதல் கடிதம்" என்று நிறுத்திய அப்பா, "யார் எழுதியது என்று கேட்க மாட்டாயா?" என்று மீண்டும் அம்மாவைச் சீண்டினார்.

அம்மா பேசாமல் இருந்தார். அப்பா அம்மாவின் மௌனத்தை ஒரு நிமிடம் ரசித்து விட்டுப் பிறகு தொடர்ந்தார். "குமார் என்று ஒரு பையன் ராதிகாவுக்கு எழுதிய கடிதம் அது."

"யார் அந்தக் குமார்?"

"இதைத் தான் நானும் ராதிகாவிடம் கேட்டேன். நீயும் நானும் எப்படி ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறோம் பார்!"

"ஏன் உங்களுக்கு அவனைத் தெரியாதா?"

"ஆச்சரியம். ராதிகா என்னிடம் கேட்ட அதே கேள்வியை நீயும் கேட்கிறாயே? 'எனக்குத் தெரியாது' என்றேன். 'என்னங்க இது? அவனும் நம் வகுப்புதான். ஆனால் B  செக்‌ஷன்' என்றாள் ராதிகா."

"நீங்கள் இருவரும் A செக்‌ஷனாக்கும்? ஆமாம் நீங்கள் இருவரும் ஒரே வகுப்புதானே? அப்புறம் ஏன் ராதிகா உங்களை 'என்னங்க' என்று சொல்ல வேண்டும். வா போ என்று சொல்ல மாட்டாளா?"

"ஓ! ஒரு மனைவி கணவனைக் கூப்பிடுவது போல் 'என்னங்க' என்று சொன்னாளே என்று யோசிக்கிறாயா? நான் அவளுக்கு டியூஷன் வாத்தியார் என்பதால் முதலிலிருந்தே என்னை அவள் 'வாங்க போங்க' என்றுதான் கூப்பிடுவாள்"

"சரி. புராணம் போதும். கதைக்கு வாருங்கள்."

"எனக்கு B செக்‌ஷனில் படிப்பவர்களை அவ்வளவாகத் தெரியாது என்றேன்."

"A செக்‌ஷனில் படிப்பவர்களை மட்டும் நன்றாகத் தெரியுமாக்கும்?"

"மறுபடியும் ராதிகா கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறாயே? நீதான் ராதிகா. ராதிகாதான் நீ!"

"இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?'

"மீதிக் கதையைச் சொல்ல வருகிறேன்!" என்று அப்பா பின்வாங்கினார்."A செக்‌ஷனில் படிக்கும் குமாருக்கு B செக்‌ஷனில் படிக்கும் உன்னை எப்படித் தெரியும்?' என்று கேட்டேன்"

"எல்லாப் பையன்களும் உங்களைப் போலவே இருப்பார்களா என்று ராதிகா கேட்டிருப்பாளே!" என்றார் அம்மா கிண்டலாக.

"அப்படியேதான் கேட்டாள்? இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? நீயும் எங்கள் வகுப்பில்தான் படித்தாயா? நான்தான் உன்னை கவனிக்காமல் இருந்து விட்டேனா?"

அம்மா பதில் சொல்லவில்லை. ஆனால் அப்பா பயந்து பின்வாங்கியதிலிருந்து அம்மா அப்பாவை எப்படி முறைத்திருப்பார் என்று என்னால் ஊகிக்க முடிந்தது!

"சரி. கதைக்கு வாருங்கள். குமாரின் காதல் கடிதம் பற்றி ராதிகா என்ன சொன்னாள்? அவளும் அவனைக் காதலிப்பதாகச் சொன்னாளா?"

"அதெப்படிச் சொல்லுவாள்? அவள்தான்..."

" 'அவள்தான் என்னைக் காதலித்தாளே' என்று சொல்ல வருகிறீர்களா?" அம்மாவின் குரலில் இப்போது உண்மையாகவே கோபம் இருந்தது.

"அதெப்படிச் சொல்லுவேன்? அவள் என்னை குருவாகத்தான் மதித்தாளே தவிர என் மீது காதல் கொள்ளவில்லையே!"

"பின்னே ஏன் 'அவள்தான்..' என்று ஆரம்பித்தீர்கள்?"

"அவள்தான் கணக்கில் வீக் ஆயிற்றே என்று சொல்ல வந்தேன்."

"அவள் கணக்கில் வீக் என்பதற்கும் குமாரின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாததற்கும் என்ன சம்பந்தம்?"

"ஏனெனில் குமார் கணக்கில் ரொம்ப ரொம்ப வீக். அவன் சாதாரணக் கூட்டலைக் கூடத் தப்புத் தப்பாகப் போடுவதைப் பார்த்து அவன் வகுப்பில் எல்லோரும் சிரிப்பார்களாம். கணக்கில் வீக்காக இருக்கும் ராதிகா என் மாதிரி ஒரு கணக்குப் புலியை விரும்புவாளே தவிரத் தன்னை விடக் கணக்கில் வீக் ஆக இருப்பவனை எப்படி விரும்புவாள்?"

"சுற்றிச் சுற்றி எங்கே வருகிறீர்கள்?" என்றாள் அம்மா எரிச்சலுடன்.

"கோபப்படாதே. ராதிகாவின் மனம் காதலில் ஈடுபடவில்லை. அந்த வயதில் வரும் அபத்தமான காதல் எண்ணங்களைக் குமார் போல் தப்புக் கணக்குப் போடுபவர்கள்தான் பெரிதாக எடுத்துக் கொள்வார்கள்!"

"அப்புறம் ஏன் அவள் குமாரின் காதல் கடிதத்தை தன் நோட்டுப் புத்தகத்தில்  வைத்திருந்தாளாம்?"

"அந்தக் கடிதத்தில் குமார் ஒரு தப்பான கூட்டல் கணக்குப் போட்டிருந்தான். அதைத் தன் நெருங்கிய தோழிகளிடம் காட்டி ரசிப்பதற்காகத்தான் அதை வைத்திருந்தாளாம்!"

"காதல் கடிதத்தில் கூட்டல் கழித்தல் எல்லாம் எங்கே வந்தது?"

"சொல்கிறேன். அந்தக் கடிதத்தில் அவன் எழுதி இருந்தான். 'என்காதல் நிறைவேற வேண்டும் என்று பிள்ளையார் கோவிலை இது வரை 18 முறை சுற்றி வந்து விட்டேன். இன்னும் 40 தடவை சுற்றி வந்தால் 108 முறை ஆகி விடும். அப்புறம் என் காதல் நிறைவேறி விடும்.'"

அம்மா பெரிதாகச் சிரித்தார். "இது தப்புக் கணக்கு போல் தோன்றவில்லை. ஏமாற்று வேலை போல் தோன்றுகிறது! நீங்கள் என்ன ஆலோசனை சொன்னீர்கள் உங்கள் சிஷ்யைக்கு?"

"அவளை அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போடச் சொன்னேன். அப்படிப்பட்ட கடிதங்களை வைத்திருப்பது ஆபத்தானது என்று சொன்னேன். அப்புறம் அவள் கிழித்துப் போடுவாளோ மாட்டளோ என்று நினைத்து நானே அதைக் கிழித்துப் போட்டு விட்டேன்."

"கதை முடிந்ததா?" என்றார் அம்மா கிண்டலாக.

"இன்னும் என்ன பாக்கி இருக்கிறது? ராதிகா யாரைக் கல்யாணம் செய்து கொண்டாள், குமார் யாரைக் கல்யாணம் செய்து கொண்டான், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்காதே! எனக்குத் தெரியாது."

"பெரிய கதாசிரியர்தான் நீங்கள்! காதல் கதை என்று ஆரம்பித்து விட்டு, அப்புறம் காதலே இல்லை என்று சொல்லி விட்டு, மறுபடியும் காதலைக் கொண்டு வந்து...... அடேயப்பா!"

"சரி. என் கதையை நான் சொல்லி விட்டேன். உன் கதையை நீ சொல்ல வேண்டாமா?"

"என்னிடம் இது போல் காதல் கதைகள் எல்லாம் இல்லை."

"நீ கல்லூரியில் படித்தபோது பாலு என்பவன் உனக்குக் காதல் கடிதம் கொடுத்தானே, அதைப் பற்றிச் சொல்லலாமே!" என்றார் அப்பா.

அம்மா அதிர்ச்சி அடைந்தவர் போல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "எனக்குக் காதல் கடிதம் கொடுத்தவன் பெயர் பாலு இல்லை, மணி"  என்றார்.

"அவன் பெயர் பாலசுப்ரமணியன் என்று இருந்திருக்கும். நான் பெயரின் முதல் பகுதியைச் சொன்னேன். நீ கடைசிப் பகுதியைச் சொல்கிறாய்!"

"இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? என் வீட்டில் யாராவது சொன்னார்களா என்ன?"

"யாரும் சொல்லவில்லை. உன்னைப் போல் அழகான பெண்ணுக்கு யாராவது ஒருவன் காதல் கடிதம் கொடுத்திருப்பான் என்ற ஊகத்தில்தான் கேட்டேன்!"

"நான் அழகாக இருப்பதாக இது வரை நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே?"

"கல்யாணம் ஆன புதிதில் சொல்லி இருக்கிறேனே, அதை மறந்து விட்டாயா?"

"அப்புறம் ஏன் சொல்லவில்லை?"

"தேவைப்பட்டால் ஒழியப் பொய் சொல்லக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  இரு, இரு! கோபித்துக் கொள்ளாதே. நான் உன்னைப் பற்றிச் சொன்னது எதுவுமே பொய் இல்லை.  உன் கதைக்கு வருவோம். மணி என்பவன் காதல் கடிதம் கொடுத்தான். அப்புறம் என்ன ஆயிற்று அவன் கதை?"

அம்மா இன்னும் கோபம் தணியாமல் மௌனமாகவே இருந்தார். அப்பா தொடர்ந்து, "கல்யாணப் பரிசு திரைப்படத்தில் சரோஜா தேவி செய்தது போல உன் கல்லூரி முதல்வரிடம் சொல்லி இருப்பாய். அவரும், திரைப்படத்தில் கல்லூரி முதல்வர் ஜெமினி கணேசனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றியது போல் மணியை வெளியேற்றி இருப்பார். அப்படித்தானே?"

"நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. கடிதத்தைக் கொண்டு போய் என் அப்பாவிடம் கொடுத்தேன்."

"அவர் என்ன செய்தார்?"

"பொறுமையாகக் கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு, 'இதெல்லாம் வயசுக் கோளாறு. அந்தப் பையனைத் திரும்பியே பார்க்காமல் உன் வேலையைப் பார். அவன் தானாகவே ஒதுங்கி விடுவான்' என்றார். அப்படியே செய்தேன். அவனும் அப்பா சொன்னது போலத் தானாகவே ஒதுங்கி விட்டான்."

"உன் அப்பா கிரேட்!" என்றார் அப்பா.

"என் அப்பாவாயிற்றே?" என்றார் அம்மா.

"என்னை உனக்குக் கணவனாகத் தேர்வு செய்தாரே அதற்காகச் சொன்னேன்!"

அம்மா எதுவும் பதில் சொல்வதற்கு முன், "ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு விதம். எத்தனை விதமான அப்பாக்கள்! அப்பப்பா!" என்று முடித்தார் அப்பா.