Thursday, December 22, 2016

6. ஐம்பது நாள் அவகாசம்

அப்பாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. 

வீட்டுக்கு வருபவர்களை அம்மா நன்கு உபசரிப்பார். அதுபோல் அப்பாவின் நண்பர்கள் வீடுகளுக்கு நாங்கள் போகும்போதும் உற்சாகமாக இருப்பார். ஆயினும் அம்மாவுக்கு ஒரு குறை உண்டு.

"ஏன், ஆண்களுக்குத்தான் நண்பர்கள் இருக்க வேண்டுமா?  பெண்களுக்கு இருக்கக் கூடாதா?" என்றார் அம்மா, ஒருநாள், அப்பாவிடம்.

"ஏன் கூடாது? நாளைக்கே யாராவது ஒருவர் வீட்டுக்குப் போய் விட்டு வந்து விடலாம். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்பநாள் ஆகி விட்டது" என்றார் அப்பா.

"நாளைக்கு நான் சமைக்கப் போவதில்லை!" என்றார் அம்மா கோபத்துடன்.

"அதைத்தானே நானும் சொன்னேன்? நாளைக்குத்தான் உன் நண்பியின் வீட்டுக்குப் போகப் போகிறோமே!' என்றார் அப்பா.

"எனக்கு நண்பிகள் யாரும் கிடையாது."

"நண்பனாக இருந்தாலும் பரவாயில்லை. நான் தப்பாக நினைக்க மாட்டேன். உன் நண்பனின் மனைவி தப்பாக நினைக்காமல் இருந்தால் சரி!"

"கடவுளே! எனக்கு நண்பர்கள் யாருமே கிடையாது" என்றார் அம்மா இரைந்து.

"அடப்பாவமே! அத்தனை பேருடனும் சண்டையா? உன்னைப் போல சண்டைக்காரியிடம் நான் எப்படி சண்டை போடாமல் குடித்தனம் நடத்துகிறேன் பார்!" என்றார் அப்பா.

"இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?"

"நீ ஏன் நாளைக்குச் சமைக்க மாட்டேன் என்று சொன்னாய்?"

"தினமும் நான்தான் சமைக்க வேண்டுமா?"

"பக்கத்து வீட்டு அம்மாள் சமைத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. நீ வேண்டுமானால் அவர்களிடம் கேட்டுப் பாரேன்."

"தினமும் வக்கணையாக சமைத்துப் போட்டால், நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாகி விட்டது என்று நக்கலா செய்கிறீர்கள்?"

"ஓ, அதுதான் கோபமா? ஐ ஆம் சாரி அம்மணி. இனி தினமும் காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை உன் சமையலைப் புகழ்ந்து பேசி விடுகிறேன். சமைக்காமல் எல்லாம் இருந்து விடாதே! ஹோட்டலில் சாப்பிட்டால் நமக்குக் கட்டுப்படியாகாது!"

"மறுபடியும் பார்த்தீர்களா.." என்று அம்மா முறைக்க, அப்பா அம்மாவை சமாதானப்படுத்த விழைந்தார்.

"உனக்கென்ன பிரச்னை? என் நண்பர்கள் வீட்டுக்கு மட்டுமே போய்க் கொண்டிருக்கிறோம், உன் நண்பர்கள் வீட்டுக்குப் போவதில்லை என்பதுதானே? நானா வர மாட்டேன் என்கிறேன்?"

"இது ஒரு ஆணாதிக்க உலகம். ஆண்கள் தங்களுடன் படித்தவர்கள், வேலை செய்தவர்கள் என்று ஒரு பெரிய நண்பர் பட்டாளமே வைத்திருப்பீர்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வந்தால், நான் அவர்களுக்கு காஃபி, டிஃபன், சாப்பாடு என்று செய்து தர வேண்டும். ஆனால், பெண்களுக்குத் தங்கள் கூடப் படித்தவர்களையோ, வேலை செய்பவர்களையோ நண்பர்களாக்கிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வர உரிமை இல்லை."

"இங்கே பார் விமலா, நீ படித்த காலத்தில் நம் இருவருக்கும் அறிமுகமே இல்லை. அதனால் நீ உன்னுடன் படித்தவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று நான் சொல்லியிருக்க முடியாது. நீ வேலைக்குப் போகவில்லை. வேண்டுமானால் நாளைக்கே ஒரு வேலைக்குப் போய், கூட வேலை செய்யும் ஒரு பட்டாளத்தையே வீட்டுக்கு அழைத்து வா. நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?"

"நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறீர்கள்? அவர்களுக்கும் நான்தானே சமைத்துப் போட வேண்டும்?"

"அதுதான் பாயிண்ட்" என்றார் அப்பா. "இப்போது புரிகிறதா, பெண்கள் ஏன் நண்பர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வதில்லை என்று?"

"ஏன், என் நண்பர்களுக்கு நீங்கள் சமைத்துப் போடக் கூடாதா?"  என்றார் அம்மா.

"போடலாம். அவர்கள் சாப்பிடுவார்களா என்று கேட்டுக் கொள். உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும் அல்லவா?"

"இது போல் ஏதாவது குதர்க்கமாகப் பேசி நழுவி விடுவீர்கள்."

"நழுவவில்லை. முதலில் உனக்கு நண்பர்களே இல்லையே?"

"அதனால் என்ன? எனக்கும், நம் பையனுக்கும் நீங்கள் சமைத்துப் போடலாமே? இத்தனை வருடங்களாக நான் உங்கள் இருவருக்கும் சமைத்துப் போடவில்லையா?"

"போடலாம்தான். அப்புறம் எனக்கு யார் சமைத்துப் போடுவார்கள்? ஓ.. முறைக்காதே. உங்கள் இருவருக்கும் சமைப்பதை நானும் சாப்பிடலாமே! என் அறிவுக்கு இது தோன்றவில்லை பார்!"

"'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று மந்திரிகுமாரியில் ஒரு பாடல் வரி வரும்."

"அதில் பாதிதான் உண்மை என்று நினைக்கிறேன். நான் இன்னும் உன்னை மயக்கியதாகத் தெரியவில்லையே!"

"சமையல் கற்றுக்கொண்டு, உங்கள் சமையலால் என்னை மயக்கப் பாருங்களேன்!"

"அப்போது கூட மயக்கப் பார்க்கத்தான் முடியும். மயக்க முடியாது!"

"ஆகக்கூடி நீங்கள் சமையல் செய்யக் கற்றுக்கொள்ள மாட்டீர்கள்!"

"மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? கண்டிப்பாகக் கற்றுக் கொள்கிறேன். நான் சமையல் கற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் வேண்டாமா?"

"எவ்வளவு அவகாசம் வேண்டும்?"

"ஒரு ஐம்பது வருஷம்.." என்ற அப்பா அம்மாவின் முறைப்பைக் கண்டு, "ஐ மீன் ஐம்பது நாள்" என்றார்.

"சரி. யாரிடம் சமையல் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?" என்றார் அம்மா.

"நீதான் கற்றுக் கொடுக்கப் போகிறாய் என்று நினைத்தேன்" என்றார் அப்பா.

"என் சமையல் மாதிரியே உங்கள் சமையலும் இருக்க வேண்டுமா? வேறு யாரிடமாவது கற்றுக் கொள்ளுங்கள்" என்றார் அம்மா.

"என் சமையலாவது நன்றாக இருக்கட்டுமே என்று பார்க்கிறாயாக்கும்! அதுவும் சரிதான். பக்கத்து வீட்டு அம்மாள் கற்றுக் கொடுப்பார்களா என்று கேட்டுப் பார்க்கட்டுமா?" என்ற அப்பா, மறுபடியும் அம்மாவின் முறைப்பைத் தாங்க முடியாமல், "சரி, சரி. என் அலுவலக நண்பன் சிவராமனிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றார்.

"அவருக்கு சமையல் தெரியுமா என்ன?"

"போன மாதம் அவன் வீட்டுக்கு மதிய உணவுக்குப் போயிருந்தோமே, நினைவிருக்கிறதா?"

"ஏன் நினைவில்லாமல்? அது போல ஒரு அற்புதமான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை. அவர் மனைவியின் கைமணம் அபாரம்."

"அது அவன் மனைவியின் கைமணம் இல்லை. அவளைக் கைப்பிடித்தவனின் கைமணம். அதாவது சிவராமனின் கைமணம்" என்றார் அப்பா.

"ஆச்சரியமாக இருக்கிறதே!" என்றார் அம்மா.

"சிவராமனின் மனைவியைக் கைப் பிடித்தவன் சிவராமனாகத்தானே இருக்க முடியும்? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?" என்றார் அப்பா..

அம்மா மறுபடி ஒருமுறை அப்பாவை முறைத்து விட்டு, "அவர் சமையலில் பாதி உங்களுக்கு வந்தால் கூடப் போதும்" என்றார்.

"முழுதாகவே கற்றுக்கொண்டு விடுகிறேன். பாதி வெந்தால் நன்றாகவா இருக்கும்" என்று முடித்தார் அப்பா.

ந்தப் பேச்சு நடந்து  சில நாட்கள் கழித்து, ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்த அம்மா தலை சுற்றிக் கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துச் சில நாட்களில் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம்.

அம்மாவுக்கு ஒரு கையும், காலும் உணர்விழந்து போய் விட்டதால் அவர் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகத்தான் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

பத்து நாட்களில் அப்பா சமைக்கக் கற்றுக் கொண்டு விட்டார். ஐம்பது நாள் அவகாசம் அவருக்குக் கிடைக்கவில்லை.

Friday, August 12, 2016

5. காதலிக்கு மரியாதை!

'மேடம்' என்று என்னால் அறியப்பட்ட அந்தப் பெண்மணியின் மரணம் பற்றிப் பத்திரிகையில் பார்த்ததும் நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்ல முடியாது. என் அப்பாவின் கீழ் பணியாற்றியவர் என்று மட்டுமே நான் அவரைப் பற்றி  அறிந்திருந்தேன். 

பத்திரிகைச் செய்தியில் அவருடைய பெயரைப் பார்க்கும் வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. என் அப்பாவைப் பார்க்க ஓரிரு முறை எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைப் பார்த்து நட்பாகச் சிரித்ததைத் தவிர அவர் என்னிடம் வேறொன்றும் பேசியதில்லை.

நான் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்ததால், இது பற்றி உடனேயே அம்மாவிடம் பேச முடியவில்லை. சில வாரங்கள் கழித்து வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் 'மேடத்தின்' மரணம் பற்றி விசாரித்தேன்.

(நான் கல்லூரியில் படித்த நாட்களில் தொலைபேசி வசதி அவ்வளவாகக் கிடையாது. என் அப்பா ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. ஆனால் என் கல்லூரி விடுதியிலோ, அதற்கு அருகிலோ தொலைபேசி வசதி இல்லை.

எப்போதாவது அவசரம் என்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று எங்கள் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு ஒரு 'ட்ரங்க் கால்' புக் செய்து விட்டு மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும்.  ஒரே ஒரு முறை, கல்லூரி ஏற்பாடு செய்திருந்த உல்லாசப் பயணத்தில் கலந்து கொள்ள எனக்குப் பணம் அனுப்பும்படி கேட்கத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

அப்போது கூடக் கடிதம் போட்டிருந்தால் போதும். ஒருமுறையாவது 'ட்ரங்க் கால்' செய்து பார்க்கலாமே என்ற ஆசையினாலும், என் வீட்டில் தொலைபேசி இருப்பதை என் நண்பர்களிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலினாலும்தான் 'ட்ரங்க் கால்' வசதியைப் பயன் படுத்தினேன்!)

"அம்மா நம் வீட்டுக்கு ஒரு மேடம்  வருவாரே, அவர் இறந்து விட்டார் போலிருக்கிறதே. பத்திரிகையில் பார்த்தேன். அவர் பெயர் எமிலிதானே?"

"தமிழ்ப் பத்திரிகையில் பார்த்தாயா?" என்றார் அம்மா சம்பந்தமே இல்லாமல்.

"ஆமாம். அதற்கென்ன?"

"அதனால்தான் அவர் பெயரை அவசரத்தில் தப்பாகப் படித்திருக்கிறாய். அவர் பெயர் எமிலி இல்லை, எழிலி."

"எழிலி! இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொள்வார்களா என்ன?"

"எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்த வேறு எழிலி யாரும் இல்லை. இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொள்வார்களா என்று கேட்கிறாயே, யாரும் பெயர் வைத்துக் கொள்வதில்லை, வைக்கப்படுகிறார்கள்."

"ஏம்மா நீ என்ன தமிழ் பண்டிட்டா?"

"இது தமிழ் சம்பந்தப்பட்டதில்லை, நடைமுறை சம்பந்தப்பட்டது!"

"ஆளை விடும்மா. அது சரி. எழிலி என்றால் என்ன அர்த்தம்?"

"ம். இந்தத் தலைமுறைக்குத் தமிழே தெரியாமல் போய் விட்டது. எழிலி என்றால் அழகானவள் என்று அர்த்தம்."

"ஓ!"

"என்ன ஓ? அவர்களைப் பார்த்தால் அவ்வளவு அழகானவர் என்று சொல்ல முடியாதே, அவர்களுக்கு எப்படி இந்தப் பெயர் வைத்தார்கள் என்று யோசிக்கிறாயா?"

"அம்மா, இங்கே பார். நீதான் நான் அப்படி நினைப்பதாகச் சொல்கிறாய். அப்படி நினைத்ததாக நான் சொல்லவில்லை!" என்றேன் ஜாக்கிரதை உணர்வுடன்.

"அப்படி நினைக்கவில்லை என்றும் நீ சொல்லவில்லையே!" என்று மடக்கினர் அம்மா. "அப்படி நினைப்பது உன் தப்பு என்று சொல்ல மாட்டேன். இந்த எண்ணம் இயல்பாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். கருப்பாக இருக்கிற ஒருவருக்கு வெள்ளையன் என்று பெயர் வைத்தால், மற்றவர்கள் சற்று புருவத்தை உயர்த்தித்தான் பார்ப்பார்கள். ஒரு குழந்தை மற்றவர்கள் கண்ணுக்கு எப்படி இருந்தாலும், பெற்றவர்களுக்கு அது ஒரு அரிய பொக்கிஷம்தான். அதனால் எழிலியின் பெற்றோர்கள் அவருக்கு எழிலி என்று பெயர் வைத்ததில் வியப்பதற்கு எதுவும் இல்லை. இன்னொரு விதத்தில் பார்த்தால் எழிலி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர்தான் அவர்."

"எப்படிச் சொல்கிறாய்?"

"அவருடைய பர்சனாலிட்டியை வைத்துப் பார்த்தால் அவர் மிகவும் அழகானவர்தான்."

"ஓ! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"முதலில் உன் அப்பா சொல்லி. அப்புறம் நானே பார்த்ததில்."

'அப்பாவுக்கு.." என்று துவங்கியவன், என் மனதில் இருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் சற்றுத் தயங்கி விட்டு, "ஆமாம். ஆரம்ப காலத்தில் அவர் அப்பாவுக்கு செகரட்டரியாக இருந்திருக்கிறார் என்று தெரியும். அப்புறம் இரண்டு பேருமே வேறு நிறுவனங்களுக்குப் போய் விட்டார்கள். ஆனால் அவர் அவ்வப்போது அப்பாவை வந்து பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருந்தாரே, ஏன்?"

"அவர்களுக்குள் வேறு எதாவது உறவு இருந்ததா என்று கேட்கிறாயா?"

"இதையும் நான் கேட்கவில்லை. நீதான்..சரி.. அவர் அப்பாவைக் காதலித்தாரா?"

"இல்லை" என்றார் அம்மா சுருக்கமாக.

"அப்பாடா" என்று நான் சற்று நிம்மதியடைந்த அடுத்த வினாடியே அம்மா அந்த குண்டை வீசினார். "உன் அப்பாதான் அவரைக் காதலித்தார்."

நான் அதிர்ச்சியுடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். "என்னம்மா, கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் சொல்கிறாய்? இதில் உனக்கு வருத்தம் இல்லையா?"

"நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? உன் அப்பாதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாரே!" என்றார் அம்மா.

எழிலி மேடம் பற்றிய விஷயத்தை அம்மா மிகவும் ரசித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவதாகத் தோன்றியது.

"அப்பா ஏன் எழிலி மேடத்தைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்றேன் நான், என் கேள்வி சரியானதுதானா என்ற குழப்பத்துடனேயே.

"இதற்கும் அதே பதில்தான். உன் அப்பாதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டாரே!" என்ற அம்மா உடனேயே "உன் பொறுமையை இதற்கு மேலும் சோதிக்க விரும்பவில்லை" என்று சொல்லி விட்டு, நடந்தவற்றை விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார். (அம்மா சொன்னதை அவர் சொன்னபடியே எழுதுகிறேன். அதுதானே சரியாக இருக்கும்?)

அம்மா சொன்னார்:

உன் அப்பா ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தபோது அவரது உதவியாளராக வந்து சேர்ந்தவர்தான் எழிலி. எழிலியின் திறமையான செயல்பாடு, வேலையில் அவருக்கு இருந்த ஈடுபாடு, அவ்வப்போது உன் அப்பாவுக்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இருந்த அவரது புத்திசாலித்தனம் ஆகியவை அவர்மீது உன் அப்பாவுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டன.

ஒருநாள் உன் அப்பா எழிலியிடம் 'என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?' என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு எழிலி 'உங்கள் பெற்றோர் இதற்குச் சம்மதிப்பார்களா?' என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார்.'

'முதலில் உன் சம்மதம் இருந்தால்தானே என் பெற்றோரிடம் கேட்க முடியும்?' என்று சொல்லியிருக்கிறார் உன் அப்பா.

 'முதலில் உங்கள் பெற்றோர் சம்மதிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்'  என்று சொல்லியிருக்கிறார் எழிலி.

'என் பெற்றோர் இதற்குச் சம்மதித்தால் நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்வாய் என்று பொருள் கொள்ளலாமா?' என்று கேட்டிருக்கிறார் உன் அப்பா விடாமல்.

'முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் அவரைச் சித்தப்பா என்று அழைப்பதில் ஒன்றும் பிரச்னை இருக்காது' என்று மழுப்பி விட்டார் எழிலி.

உன் அப்பா  தன் பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். உன் தாத்தா பாட்டி இதற்குச் சம்மதிக்கவில்லை.

"என்ன காரணத்துக்காகச் சம்மதிக்கவில்லை?" என்றேன் நான்.

"அந்தக் காலத்தில் பெற்றோர் காதல் திருமணத்துக்குச் சம்மதிப்பது  என்பது பாலைவனத்தில் மழை பெய்கிற மாதிரி அரிதான  விஷயம். சம்மதிக்காமல் இருப்பதற்குக் காரணம் தேவையில்லை. சம்மதித்தால்தான் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் - பெண் பெரிய செல்வந்தரின் மகள் என்கிற மாதிரி!"

"சரி அப்புறம் என்ன ஆயிற்று?"

அம்மா கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு கொக்கியைப் போட்டார். "அதற்காக இந்தக் காலத்துப் பெற்றோர்கள் எல்லாம் காதல் திருமணத்துக்குப் பச்சைக்கொடி காட்டுபவர்கள் என்று நினைத்துக்கொள்ளாதே. நாளைக்கு நீ யாரையாவது காதலிக்கிறேன் என்று வந்து நின்றால், நானும் உன் அப்பாவும் அதற்குச் சம்மதிக்க மாட்டோம்!" என்றார் அம்மா.

இதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லாததால் அம்மா கதையைத் தொடர்ந்தார்:

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், உன் தாத்தா பாட்டி உன் அப்பாவிடம் 'முதலில் அந்தப் பெண் இதற்குச் சம்மதித்தாளா?' என்று கேட்டிருக்கிறார்கள்.

உன் அப்பா, 'இதென்ன அவளானால்  நீங்கள் இதற்குச் சம்மதிப்பீர்களா என்று கேட்கிறாள். நீங்கள் என்னவென்றால் அவள் சம்மதித்தாளா என்று கேட்கிறீர்கள். இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறீர்களா என்ன?' என்று கேட்டிருக்கிறார்.

'அப்படிச் சொல்லியிருந்தால் அவள் நல்ல பெண்தான். ஆனாலும் நாங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது' என்று சொல்லி விட்டாராம் உன் தாத்தா.

உன் அப்பா இதை எழிலியிடம் சொல்ல, அவர் 'இதை நான் எதிர்பார்த்தேன்' என்றார். அதோடு முடிந்தது உன் அப்பாவின் காதல் கதை.

"அப்பா இதை அப்படியே விட்டு விட்டாரா?" என்றேன் நான்.

"விட்டிருப்பாரா என்ன?" என்ற அம்மா தொடர்ந்து சொன்னர்:

'நாம் ஏன் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது?' என்று என்று எழிலியிடம் கேட்டிருக்கிறார் உன் அப்பா.

 'உங்கள் அப்பா அம்மாவின் விருப்பத்துக்கு எதிராக என்னைக் கல்யாணம் செய்து கொள்வீர்களா?' என்று எழிலி கேட்க, உன் அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை.

சில நாட்கள் கழித்து, 'என்னைக் கல்யாணம் செய்து கொள்வதில் உனக்கு ஏன் விருப்பம் இல்லை? அதை மட்டும் சொல்லு? என்று குடைந்திருக்கிறார் உன் அப்பா.

'விருப்பம் இல்லை என்று நான் எப்போது சொன்னேன்?' என்று எழிலி கேட்க, உன் அப்பா, 'நீ சொல்லாவிட்டாலும் அது எனக்குப் புரிகிறது' என்றாராம்.

'விருப்பம் இல்லை என்று சொல்வதை விட உங்களுக்கும் எனக்கும் பொருத்தம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்' என்று எழிலி சொன்னதற்கு, 'நீ சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே! உனக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்?' என்று சொல்லியிருக்கிறார் உன் அப்பா.

'அது வேலை விஷயத்தில். உங்கள் மனதில் இருப்பது எனக்குப் புரியும். உங்களுக்கு எது நல்லது என்பதும் எனக்குத் தெரியும். உங்களுடைய திறமை என்ன, பலவீனம் என்ன என்று தெரிந்து வைத்திருப்பதால்தான் உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்.'

'அதை அதிகப்பிரசங்கித்தனமாக நான் நினைக்கவில்லையே! உன் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டுதானே நடந்து கொண்டிருக்கிறேன்?'

'நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள் என்பதால்தான் என்னால் தைரியமாக என் யோசனைகளை உங்களுக்குத் சொல்ல முடிந்தது. வேறொருவராக இருந்தால் 'நான் சொல்வதைச் செய்வதுதான் உன் வேலை. எனக்கு யோசனை சொல்லும் அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் வேண்டாம்' என்று சொல்லி என் வாலை ஒட்ட நறுக்கி இருப்பார்கள்!'

 'அப்புறம் என்ன?'

'சார், இதெல்லாம் அலுவலகத்தில். ஒருவேளை நாம் கல்யாணம் செய்து கொண்டால், நம் குடும்ப வாழ்க்கையிலும் இதே போன்ற நிலைதான் இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?'

'ஏன் இருக்காது?'

'இல்லாமல் போவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. முதலில் ஒரு அலுப்பு ஏற்படும். அலுவலகத்தில் இருவரும் எட்டு மணி நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, வீட்டுக்குப் போன பிறகும் இதே முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், நாளடைவில் ஒரு சலிப்பு ஏற்படலாம். ஏற்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

'இரண்டாவது, உங்களுக்கு ஒரு நல்ல செகரட்டரியாக இருக்கும் நான் ஒரு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சொல்லப் போனால், உங்களுக்கு என்னைப்பற்றி எதுவுமே தெரியாது. நானாவது ஓரளவுக்கு உங்களைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறேன் - உங்கள் பெற்றோர் நம் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் கூட.'

'அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் நாம் குடும்ப வாழ்க்கையிலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கலாம்!' என்று உன் அப்பா சொல்லி இருக்கிறார்.

'சார், தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் வேலையிலேயே அதிக அக்கறை செலுத்துவதால், நீங்கள் வெளி உலகத்தை சரியாக கவனித்துப் பார்த்ததில்லை. ஒரே அலுவலகத்தில் வேலை செய்த சிலர் திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். நான் மனோதத்துவம் படித்ததில்லை. ஆனால் அலுவலகத்தில் இருக்கும் சுமுக உறவின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவது ஒரு மனரீதியான பொறி - சைக்கலாஜிக்கல் டிராப் - என்று நினைக்கிறேன். எலி, பொறியில் சிக்கிக்கொள்வது போல், பலர் இதில் சிக்கிக்கொள்கிறார்கள். சமீபத்தில் 'பாலும் பழமும்' என்று ஒரு சினிமா பார்த்தேன்.'

'அப்படி ஒரு சினிமா வந்திருக்கிறதா என்ன? அதற்கும் நாம் பேசுகிற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?'

'பார்த்தீர்களா? எனக்கு சினிமாவில் ஈடுபாடு உண்டு. உங்களுக்கு அடியோடு இல்லை. இது நமக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகளுக்கு ஒரு உதாரணம். அதில் டாக்டராக வரும் சிவாஜி ஒரு நர்ஸான சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்வார். இதைக் கிண்டல் செய்து எம் ஆர் ராதா ஒரு வசனம் பேசுவார். 'டாக்டர்னா நர்ஸைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும், இன்ஜினியர்னா சித்தாளைத்தான் கட்டிக்கணும்' என்று. வேடிக்கையாகத் தோன்றினாலும் இந்தக் கிண்டலில் ஒரு ஆழமான பொருள் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒன்றாக வேலை செய்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பது தவறான கணக்காக இருக்கும்.'

"அப்பா சமாதானம் அடைந்து விட்டாரா?" என்றேன் நான்.

"அவருக்கு வேறு வழி இல்லை" என்றார் அம்மா.

"இதற்குப் பிறகுதான் அப்பாவும் எழிலி மேடமும் வேறு வேறு கம்பெனிகளுக்கு வேலைக்குப் போய் விட்டார்களா?"

"ஆமாம். ஆனால் இதற்குக் காரணமும் எழிலிதான். அவர்கள் இருவருக்குமே அந்த நிறுவனத்தில் அதற்கு மேல் வளர்ச்சி இருக்காது என்பதை உணர்ந்த எழிலி உன் அப்பாவை வேறு நிறுவனத்துக்கு வேலைக்கு முயற்சி செய்ய ஊக்குவித்தார். உன் அப்பா வேறு நல்ல வேலை கிடைத்துப் போனதும், எழிலியும் வேறு நல்ல வேலைக்குப்  போய் விட்டார். அதற்குப் பிறகு காலப்போக்கில் இருவருமே மிக உயர்ந்த நிலைக்கு வந்து விட்டனர்."

'உன் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லவில்லையே!"

"இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, நல்ல பிள்ளையாக, தன் பெற்றோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டார் உன் அப்பா!"

"ஆமாம். இந்த விவரம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்பே உனக்குத் தெரியுமா?"

'ஓ! பெண் பார்க்க வரும்போதே என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லி எழிலியைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விட்டார் உன் அப்பா. நாங்கள் இரண்டு பேரும் அரை மணி நேரத்துக்கு மேல் தனியாகப் பேசிக்கொண்டதைப்  பார்த்து எங்கள் இருவரது பெற்றோரும் ஆச்சரியப்பட்டார்கள்."

"அப்பா மிகவும் நேர்மையானவர்தான்."

"ஆமாம். அத்துடன் அவர்  மிகவும் ஜாக்கிரதை உள்ளவர். பின்னால் நான் எதுவும் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவும் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி இருப்பார்!"

"கடைசி வரை எழிலி மேடம் அப்பாவுடன் டச் வைத்திருந்தார் போலிருக்கிறதே!"

"ஆமாம். அவ்வப்போது அப்பாவுக்கு ஃபோன் செய்வார். அநேகமாக நான்தான் ஃபோனை எடுப்பேன். 'நான் எழிலி பேசுகிறேன் மேடம். எப்படி இருக்கீங்க?' என்று விசாரித்து விட்டு, உடனேயே 'சார் இருக்கிறாரா?' என்பார். நம் குடும்ப விஷயம் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசியதில்லை. உன் அப்பாவிடமும் பேசியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

"உன் அப்பா, எழிலி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உத்தியோக முன்னேற்றத்துக்கு உதவியிருக்கிறார்கள். இன்று உன் அப்பா ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு எழிலியின் ஊக்குவிப்பும், ஆலோசனைகளும் ஒரு முக்கியக் காரணம். அது போல, கல்வித்தகுதி அதிகம் இல்லாத எழிலி ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார் என்றால் உன் அப்பாவின் ஊக்குவிப்பும், எழிலியின் திறமைகள் பற்றி அவர் பலரிடமும் எடுத்துச் சொன்னதும் ஒரு முக்கிய காரணம்.

"என் பார்வையில், உன் அப்பா எழிலிக்கு உதவியதை விட, எழிலி உன் அப்பாவுக்கு உதவியதுதான் அதிகம். இதை நான் உன் அப்பாவிடமும் சொல்லியிருக்கிறேன். அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்."

"நீங்கள் மூன்று பேருமே மிகவும் மனமுதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அப்பா தன் காதல் தோல்வியைப் பெரிதாக நினைக்காமல் கல்யாணம் செய்து கொண்டது, கல்யாணத்துக்கு முன் உன்னிடம் வெளிப்படையாகப் பேசியது, நீ அப்பாவுக்கும் எழிலி மேடத்துக்கும் இருந்த தொழில் முறை உறவைச் சரியாகப் புரிந்து கொண்டது, எழிலி மேடத்தின் முதிர்ச்சியான அணுகுமுறை, அப்பாவின் முன்னேற்றத்தில் அவர் காட்டிய அக்கறை எல்லாமே எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட மூன்று பேருமே இத்தனை முதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம்" என்றேன் நான்.

"நீ பெரிய அனுபவஸ்தன் மாதிரி பேசுகிறாயே, இத்தனை முதிர்ந்த  சிந்தனை உனக்கு எப்படி வந்தது?" என்றார் அம்மா.

அப்போது அப்பா தற்செயலாக அங்கே வந்தார். "என்ன அம்மாவும் பிள்ளையும் எதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தெரிகிறதே!" என்றார்.

"எழிலியின் மரணச் செய்தி பற்றிப் பத்திரிகையில் பார்த்து விட்டு என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தான்."

அப்பாவின் முகத்தில் சிறிய மாறுதல் தெரிந்தது. "எழிலியைப் பற்றி இவனுக்குத் தெரியுமா என்ன?" என்றார் சற்றே பதற்றத்துடன்.

"அவர் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறானாம்!" என்றார் அம்மா யதார்த்தமாக.