Thursday, December 22, 2016

6. ஐம்பது நாள் அவகாசம்

அப்பாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. 

வீட்டுக்கு வருபவர்களை அம்மா நன்கு உபசரிப்பார். அதுபோல் அப்பாவின் நண்பர்கள் வீடுகளுக்கு நாங்கள் போகும்போதும் உற்சாகமாக இருப்பார். ஆயினும் அம்மாவுக்கு ஒரு குறை உண்டு.

"ஏன், ஆண்களுக்குத்தான் நண்பர்கள் இருக்க வேண்டுமா?  பெண்களுக்கு இருக்கக் கூடாதா?" என்றார் அம்மா, ஒருநாள், அப்பாவிடம்.

"ஏன் கூடாது? நாளைக்கே யாராவது ஒருவர் வீட்டுக்குப் போய் விட்டு வந்து விடலாம். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்பநாள் ஆகி விட்டது" என்றார் அப்பா.

"நாளைக்கு நான் சமைக்கப் போவதில்லை!" என்றார் அம்மா கோபத்துடன்.

"அதைத்தானே நானும் சொன்னேன்? நாளைக்குத்தான் உன் நண்பியின் வீட்டுக்குப் போகப் போகிறோமே!' என்றார் அப்பா.

"எனக்கு நண்பிகள் யாரும் கிடையாது."

"நண்பனாக இருந்தாலும் பரவாயில்லை. நான் தப்பாக நினைக்க மாட்டேன். உன் நண்பனின் மனைவி தப்பாக நினைக்காமல் இருந்தால் சரி!"

"கடவுளே! எனக்கு நண்பர்கள் யாருமே கிடையாது" என்றார் அம்மா இரைந்து.

"அடப்பாவமே! அத்தனை பேருடனும் சண்டையா? உன்னைப் போல சண்டைக்காரியிடம் நான் எப்படி சண்டை போடாமல் குடித்தனம் நடத்துகிறேன் பார்!" என்றார் அப்பா.

"இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?"

"நீ ஏன் நாளைக்குச் சமைக்க மாட்டேன் என்று சொன்னாய்?"

"தினமும் நான்தான் சமைக்க வேண்டுமா?"

"பக்கத்து வீட்டு அம்மாள் சமைத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. நீ வேண்டுமானால் அவர்களிடம் கேட்டுப் பாரேன்."

"தினமும் வக்கணையாக சமைத்துப் போட்டால், நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாகி விட்டது என்று நக்கலா செய்கிறீர்கள்?"

"ஓ, அதுதான் கோபமா? ஐ ஆம் சாரி அம்மணி. இனி தினமும் காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை உன் சமையலைப் புகழ்ந்து பேசி விடுகிறேன். சமைக்காமல் எல்லாம் இருந்து விடாதே! ஹோட்டலில் சாப்பிட்டால் நமக்குக் கட்டுப்படியாகாது!"

"மறுபடியும் பார்த்தீர்களா.." என்று அம்மா முறைக்க, அப்பா அம்மாவை சமாதானப்படுத்த விழைந்தார்.

"உனக்கென்ன பிரச்னை? என் நண்பர்கள் வீட்டுக்கு மட்டுமே போய்க் கொண்டிருக்கிறோம், உன் நண்பர்கள் வீட்டுக்குப் போவதில்லை என்பதுதானே? நானா வர மாட்டேன் என்கிறேன்?"

"இது ஒரு ஆணாதிக்க உலகம். ஆண்கள் தங்களுடன் படித்தவர்கள், வேலை செய்தவர்கள் என்று ஒரு பெரிய நண்பர் பட்டாளமே வைத்திருப்பீர்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வந்தால், நான் அவர்களுக்கு காஃபி, டிஃபன், சாப்பாடு என்று செய்து தர வேண்டும். ஆனால், பெண்களுக்குத் தங்கள் கூடப் படித்தவர்களையோ, வேலை செய்பவர்களையோ நண்பர்களாக்கிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வர உரிமை இல்லை."

"இங்கே பார் விமலா, நீ படித்த காலத்தில் நம் இருவருக்கும் அறிமுகமே இல்லை. அதனால் நீ உன்னுடன் படித்தவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று நான் சொல்லியிருக்க முடியாது. நீ வேலைக்குப் போகவில்லை. வேண்டுமானால் நாளைக்கே ஒரு வேலைக்குப் போய், கூட வேலை செய்யும் ஒரு பட்டாளத்தையே வீட்டுக்கு அழைத்து வா. நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?"

"நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறீர்கள்? அவர்களுக்கும் நான்தானே சமைத்துப் போட வேண்டும்?"

"அதுதான் பாயிண்ட்" என்றார் அப்பா. "இப்போது புரிகிறதா, பெண்கள் ஏன் நண்பர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வதில்லை என்று?"

"ஏன், என் நண்பர்களுக்கு நீங்கள் சமைத்துப் போடக் கூடாதா?"  என்றார் அம்மா.

"போடலாம். அவர்கள் சாப்பிடுவார்களா என்று கேட்டுக் கொள். உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும் அல்லவா?"

"இது போல் ஏதாவது குதர்க்கமாகப் பேசி நழுவி விடுவீர்கள்."

"நழுவவில்லை. முதலில் உனக்கு நண்பர்களே இல்லையே?"

"அதனால் என்ன? எனக்கும், நம் பையனுக்கும் நீங்கள் சமைத்துப் போடலாமே? இத்தனை வருடங்களாக நான் உங்கள் இருவருக்கும் சமைத்துப் போடவில்லையா?"

"போடலாம்தான். அப்புறம் எனக்கு யார் சமைத்துப் போடுவார்கள்? ஓ.. முறைக்காதே. உங்கள் இருவருக்கும் சமைப்பதை நானும் சாப்பிடலாமே! என் அறிவுக்கு இது தோன்றவில்லை பார்!"

"'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று மந்திரிகுமாரியில் ஒரு பாடல் வரி வரும்."

"அதில் பாதிதான் உண்மை என்று நினைக்கிறேன். நான் இன்னும் உன்னை மயக்கியதாகத் தெரியவில்லையே!"

"சமையல் கற்றுக்கொண்டு, உங்கள் சமையலால் என்னை மயக்கப் பாருங்களேன்!"

"அப்போது கூட மயக்கப் பார்க்கத்தான் முடியும். மயக்க முடியாது!"

"ஆகக்கூடி நீங்கள் சமையல் செய்யக் கற்றுக்கொள்ள மாட்டீர்கள்!"

"மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? கண்டிப்பாகக் கற்றுக் கொள்கிறேன். நான் சமையல் கற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் வேண்டாமா?"

"எவ்வளவு அவகாசம் வேண்டும்?"

"ஒரு ஐம்பது வருஷம்.." என்ற அப்பா அம்மாவின் முறைப்பைக் கண்டு, "ஐ மீன் ஐம்பது நாள்" என்றார்.

"சரி. யாரிடம் சமையல் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?" என்றார் அம்மா.

"நீதான் கற்றுக் கொடுக்கப் போகிறாய் என்று நினைத்தேன்" என்றார் அப்பா.

"என் சமையல் மாதிரியே உங்கள் சமையலும் இருக்க வேண்டுமா? வேறு யாரிடமாவது கற்றுக் கொள்ளுங்கள்" என்றார் அம்மா.

"என் சமையலாவது நன்றாக இருக்கட்டுமே என்று பார்க்கிறாயாக்கும்! அதுவும் சரிதான். பக்கத்து வீட்டு அம்மாள் கற்றுக் கொடுப்பார்களா என்று கேட்டுப் பார்க்கட்டுமா?" என்ற அப்பா, மறுபடியும் அம்மாவின் முறைப்பைத் தாங்க முடியாமல், "சரி, சரி. என் அலுவலக நண்பன் சிவராமனிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றார்.

"அவருக்கு சமையல் தெரியுமா என்ன?"

"போன மாதம் அவன் வீட்டுக்கு மதிய உணவுக்குப் போயிருந்தோமே, நினைவிருக்கிறதா?"

"ஏன் நினைவில்லாமல்? அது போல ஒரு அற்புதமான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை. அவர் மனைவியின் கைமணம் அபாரம்."

"அது அவன் மனைவியின் கைமணம் இல்லை. அவளைக் கைப்பிடித்தவனின் கைமணம். அதாவது சிவராமனின் கைமணம்" என்றார் அப்பா.

"ஆச்சரியமாக இருக்கிறதே!" என்றார் அம்மா.

"சிவராமனின் மனைவியைக் கைப் பிடித்தவன் சிவராமனாகத்தானே இருக்க முடியும்? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?" என்றார் அப்பா..

அம்மா மறுபடி ஒருமுறை அப்பாவை முறைத்து விட்டு, "அவர் சமையலில் பாதி உங்களுக்கு வந்தால் கூடப் போதும்" என்றார்.

"முழுதாகவே கற்றுக்கொண்டு விடுகிறேன். பாதி வெந்தால் நன்றாகவா இருக்கும்" என்று முடித்தார் அப்பா.

ந்தப் பேச்சு நடந்து  சில நாட்கள் கழித்து, ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்த அம்மா தலை சுற்றிக் கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துச் சில நாட்களில் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம்.

அம்மாவுக்கு ஒரு கையும், காலும் உணர்விழந்து போய் விட்டதால் அவர் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகத்தான் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

பத்து நாட்களில் அப்பா சமைக்கக் கற்றுக் கொண்டு விட்டார். ஐம்பது நாள் அவகாசம் அவருக்குக் கிடைக்கவில்லை.