Sunday, April 9, 2017

7. அப்பாவின் நியாயங்கள்

ஒருநாள் ஆங்கிலப் பத்திரிகையில் நான் படித்த 'டபிள் ஸ்டாண்டர்ட்ஸ்' என்ற சொற்றொடருக்கு  அர்த்தம் என்ன என்று அப்பாவிடம் கேட்டேன்.

"இரட்டை நிலை" என்றார் அம்மா முந்திக்கொண்டு.

"அப்படீன்னா?"

"தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்!" என்றார் அப்பா.

"அது எப்படி? நியாயம் எல்லாருக்கும் பொதுவாத்தானே இருக்கணும்?" என்றேன்.

"இருக்கணும்தான். அப்படி இல்லாட்டாதான் 'டபிள் ஸ்டாண்டர்ட்ஸ்னு' சொல்றோம்."

"அரசியல்ல இது ரொம்ப சகஜம்" என்றார் அம்மா.

"ஏன் நம்ம வீட்டிலேயே இருக்கே!" என்றார் அப்பா. "ஒருநாள் வெளியில போயிட்டு வரும்போது வீட்டுச் சாவியை ஹோட்டலிலேயே விட்டுட்டு வந்துட்டேன். 'உங்களுக்குப்  பொறுப்பே கிடையாது' ன்னு உன் அம்மாகிட்ட திட்டு வாங்கினேன்."

"அப்புறம் என்ன ஆச்சு? பூட்டை உடைச்சீங்களா?" என்றேன் ஆவலுடன்.

"பூட்டை ஏன் உடைக்கணும்? நான் ஹோட்டலுக்குத் திரும்பிப் போய்ச் சாவியை எடுத்துட்டு வந்துட்டேன். நல்ல வேளை. சாவியை ஹோட்டலில் எடுத்து வைத்திருந்தார்கள்" என்றார் அப்பா.

"அதுவரையிலும், நான் கொட்டு கொட்டுன்னு வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தேன்" என்றார் அம்மா.

"எவ்வளவு நேரம்? ஒரு பத்து நிமிஷம் இருக்குமா?" என்றார் அப்பா.

"பத்து நிமிஷத்துல எங்க வந்தீங்க? அரைமணி நேரம் ஆகியிருக்கும்."

"காத்துக்கிட்டிருக்கும்போது  எப்பவுமே நேரம் அதிகம் ஆகியிருக்கிற மாதிரிதான் தெரியும்!" என்றார் அப்பா விடாமல்.

"அது சரி. இதிலே டபிள் ஸ்டாண்டார்ட்ஸ் எங்கே வந்தது?" என்றேன் நான்.

"சொல்றேன்" என்றார் அப்பா. "இன்னொரு சமயம் உன் அம்மா ஷாப்பிங் போயிட்டு வரும்போது சாவியை எங்கேயோ வச்சுட்டு வந்துட்டா. நான் ஆஃபீஸ்ல இருந்தேன். உங்கம்மா எனக்கு  ஃபோன் பண்ணினா. எங்கிட்ட இன்னொரு சாவி இருந்ததனால ஆஃபீஸ்ல சொல்லிட்டு நான் சாவியை எடுத்துக்கிட்டு வந்து வீட்டைத் திறந்தேன். அப்ப உங்கம்மா ஒரு மணி நேரம் காத்துக்கிட்டிருந்திருப்பான்னு நினைக்கிறேன். இல்லையா பங்கஜம்?" என்று சிரித்துக்கொண்டே அம்மாவைப் பார்த்தார் அப்பா.

"சாவி கிடைச்சுதா இல்லியா?" என்றேன் நான் ஆவலுடன்.

"உனக்குக் கதை கேட்கிற ஆர்வம்! கிடைச்சுது. நான்தான் உங்கம்மா போன கடைகளுக்கெல்லாம் போய்த் தேடி அலைஞ்சு சாவியைக் கண்டுபிடிச்சு வாங்கிக்கிட்டு வந்தேன். தான் சாவியைத் தொலைச்சதைப் பத்தி உங்கம்மா என்ன சொன்னா தெரியுமா?"

"சாவியை மறந்து போய் எங்கேயாவது வச்சுட்டு வரது எல்லோருக்கும் சகஜம்தானேன்னு சொல்லியிருப்பாங்க" என்றேன் நான்.

"அப்படிப் போடு. உங்கம்மாவை நீ நல்லா புரிஞ்சு வச்சிருக்கியே!" என்றார் அப்பா.  அம்மா கோபப்படாமல் சிரித்தார்.

ப்பாவுக்கே டபிள் ஸ்டாண்டர்ட்ஸ் உண்டு என்பதை வேறு சில சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டேன்.  இதை டபிள்  ஸ்டாண்டர்ட்ஸ் என்று சொல்வதை விட 'தனக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்' என்று தமிழில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் இப்படிச் சொல்வதன் பொருள் என்னவென்று, இந்தச் சந்தர்ப்பங்களை நான் விவரித்ததும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அப்பாவுக்கு அரசியலில் தீவிரமான கருத்துக்கள் உண்டு. வீட்டில் தன்  கருத்துக்களைச் சில சமயம் சொல்லுவார். எனக்கு அவை புரிவதில்லை. அம்மா மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அம்மாவும் அப்பாவும் தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வந்ததும் அம்மாவிடம் "அப்பா சொன்னபடிதான் நீ ஓட்டுப் போட்டாயா?" என்று கேட்டேன்.

அம்மா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "நான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று உன் அப்பா ஒரு தடவை கூட என்னிடம் சொன்னதில்லை. நான் யாருக்குப் போட்டேன் என்று கேட்டதும் இல்லை. அவர் தன் கருத்துக்களை வீட்டில் பேசுவதால், அவர் யாருக்கு ஓட்டுப் போட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் யாருக்குப் போட்டேன் என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அவர் விரும்பியதும் இல்லை" என்றார் அம்மா!

ஒரு முறை எங்கள் உறவினர் ஒருவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய அரசியல் கருத்துக்கள் அப்பாவின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவர் காரசாரமாகத் தன்  கருத்துக்களைப் பேசினார். அப்பா மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சில சமயம் மரியாதைக்காக அப்பா இலேசாகத் தலையாட்டியது அவர் கருத்தை அப்பா ஏற்றுக்கொள்வது போல் கூட அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்!

அவர் ஊருக்குப் போனதும் அப்பாவிடம் கேட்டேன். "அவர் சொன்ன கருத்துக்களை நீ ஏன் மறுத்துப் பேசவில்லை?" என்று.

"அவர் நம் விருந்தாளி. அவர் கருத்தை நான் மறுத்துப் பேசினால் அவருக்கு அது பிடிக்காமல் போகலாம். நம் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை மனம் வருந்தச் செய்வது தவறு இல்லையா?" என்றார் அப்பா.

இன்னொரு முறை நாங்கள் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்த நண்பரும் அப்பாவின் அரசியல் கருத்துக்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்டவர் போலும்! அவர் தன் கருத்துக்களை ஆணித்தரமாக அடித்துப் பேசினார். அப்பா வாயே திறக்கவில்லை. "என்ன சொல்றீங்க?" என்று அவர் ஓரிரு முறை கேட்டபோது கூட அப்பா சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.

நாங்கள்  வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவிடம் கேட்டேன். "விருந்தாளியை மறுத்துப் பேசினால் அவர் மனம் நோகலாம், அதனால்தான் அவரை மறுத்துப் பேசவில்லை  என்று முன்பு சொன்னாய். ஆனால் இப்போது நாம் விருந்தாளியாகத்தானே உன் நண்பர்  வீட்டுக்குப் போனோம்? இப்போதும் ஏன் பதில் பேசாமல் இருந்தாய்?" என்றேன்.

"நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராகப் போயிருக்கும்போது அவர்கள் மனதை நோகடிக்கலாமா? அவர்கள் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், சும்மா கேட்டுக்கொண்டு தலையாட்டிவிட்டு வருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவம்!" என்றார் அப்பா.

இது 'தனக்கொரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயம்' இல்லாமல் வேறு என்ன?

ன்னொரு சம்பவம்.

நாங்கள் ஒரு வீட்டில் குடியிருந்தோம். வீட்டைக் காலி செய்யும்போது பாத்ரூமில் சில குழாய்கள் துருப்பிடித்து விட்டதாகக் கூறி அவற்றை மாற்றுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வீட்டுக்காரர் கேட்டார்.

'அது எங்கள் தவறினால் நேர்ந்ததில்லை' என்று அப்பா விளக்கியும் கேட்காமல், 'நாங்கள் வீட்டை உங்களுக்கு எப்படிக் கொடுத்தோமோ, அதே போல் எங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டியது உங்கள் கடமை" என்று வாதாடினார் வீட்டுக்காரர்.

அப்பா அதற்கு மேல் பேசாமல், அவர் கேட்ட தொகையை நாங்கள் கொடுத்த முன்பணத்திலிருந்து கழித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டார்.

அம்மா கூட, "பைப் துருப்பிடித்தது என்றால் அவர்கள் போட்ட பைப் தரமில்லாதது என்றுதானே அர்த்தம்? நாம் எப்படி அதற்குப் பொறுப்பாக முடியும்?" என்று அப்பாவிடம் கேட்டார்.

அதற்கு அப்பா, "பரவாயில்லை, விடு. வீட்டை அவர் எப்படிக் கொடுத்தாரோ அதேபோல் ஒப்படைக்க வேண்டும் என்று வீட்டுக்காரர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது அல்லவா?" என்றார்.

இதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு  நகரின் வேறு பகுதியில் இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்தார்கள். அவர்கள் வீட்டைச் சரியாகப் பராமரிக்காததால்  வீட்டில் பல பழுதுகள் ஏற்பட்டிருந்தன. சில மின் இணைப்புகள், பாத்ரூம் சுவர்கள் போன்றவற்றைப் புதிதாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடியிருந்தவரிடம் அப்பா "என்ன சார், வீட்டை இவ்வளவு மோசமாக வைத்துக்கொண்டிருக்கிறீர்களே! எனக்கு நிறைய ரிப்பேர் செலவு வைத்து விட்டீர்களே!" என்று கேட்டாரே தவிர, அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட இழப்பீடாகக் கேட்கவில்லை.

"நாம் குடியிருந்த வீட்டுக்கு ஆன ரிப்பேர் செலவுகளை நாம் ஏற்றுக்கொண்டது போல், நம் வீட்டு ரிப்பேர் செலவுகளைக் குடியிருந்தவர்களிடம் கேட்டு வாங்குவதுதானே நியாயம்?" என்றார் அம்மா.

"நம் வீட்டை நாம்தான் ரிப்பேர் செய்து கொள்ள வேண்டும். ரிப்பேர் செலவைக்  குடியிருந்தவர்களிடம் கேட்பது நியாயமில்லை. நம் வீட்டுக்காரர் நம்மிடம் கேட்டார் என்பதற்காக நாமும் நம் வீட்டில் குடியிருந்தவரிடம் கேட்பது எப்படி நியாயமாகும்?" என்றார் அப்பா.

"உங்கள் நியாயங்களே தனி!" என்று அலுத்துக் கொண்டார் அம்மா!

No comments:

Post a Comment