Friday, May 8, 2015

2. இளநீர்

அப்பா எப்போதுமே பார்ப்பதற்கு எளிமையாக இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் எவருமே அவர் வசதியற்ற, அதிகம் படிக்காத, ஒரு சாதாரண மனிதர் என்றுதான் நினைப்பார்கள். 

எப்போதுமே ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் உள்ளவர்கள் கூட அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியாதோ என்று நினைத்து அவரிடம் தமிழில் பேசுவார்கள். அவர்களுக்கு பதில் கூறும்போது,  அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசித் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ள அப்பா எப்போதுமே முயற்சி செய்ததில்லை.

அப்போது நான் சிறு பையன். அப்பாவோடு அவரது நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்பாவின் நண்பர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்பாவின் நண்பரின் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவரது அறை இருக்கும் பகுதிக்கு வந்தபோது, அங்கே இருந்த ஒரு பியூன் அப்பா ஏதோ நன்கொடை கேட்க வந்திருப்பாரோ என்று நினைத்தது போல் அப்பாவிடம் வெகு அலட்சியமாக நடந்து கொண்டார்.

வயதில் பெரியவரான அப்பாவை 'வா, போ' என்று மரியாதையில்லாமல் பேசினார்.  

"சார் ஃபோன்ல பேசிக்கிட்டிருக்கார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு" என்றவர் எங்களை உட்காரக் கூடச் சொல்லவில்லை. அங்கே நாற்காலிகள் இருந்தும் அப்பா உட்காராமல் நின்று கொண்டிருந்தார்.

சற்று நேரம் கழித்து அப்பாவின் நண்பர் அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அப்பாவைப் பார்த்து உற்சாகத்துடன், "வாடா! எப்ப வந்தே?" என்றார்.

 அப்பா, "என்னடா, சி எம்மைக் கூடப் பாத்துடலாம் போலிருக்கு! உன்னைப் பார்க்க முடியாது போலிருக்கே?" என்றார்.

"ஏன் ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா என்ன?" என்றார் நண்பர்.

 "இல்லை, இப்பத்தான் உள்ளே நுழையறோம். சும்மாதான் சொன்னேன்" என்றார் அப்பா.

உள்ளே போய் உட்கார்ந்ததும், "என்ன சாப்பிடறே? காப்பி சொல்லட்டுமா? பையனுக்கு வேணும்னா ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன்" என்றார் அவர்.

"பரவாயில்லை. நான் காப்பி சாப்பிடறதில்லை" என்றார் அப்பா.

"வேறே என்ன சாப்பிடுவே?"

"பரவாயில்லை விடுடா!"

"சொல்லுடா!" என்றார் நண்பர் விடாமல்.

"நான் இளநீர்தான் சாப்பிடுவேன். அது இங்கே கிடைக்காது போலிருக்கே! இது சீஸன் வேறே இல்லை" என்றார் அப்பா.

"அதைப்பத்தி உனக்கென்ன? நான் வாங்கிக்கிட்டு வரச் சொல்றேன்" என்ற நண்பர், பியூனை அழைத்து, "மூணு இளநீர் வாங்கிக்கிட்டு வா" என்றார்.

"சார், பக்கத்தில எங்கேயும் இளநீர் கிடைக்காதே!"

"எங்கே கிடைக்குமோ அங்கே போய் வாங்கிட்டு வா."

அரைமணி நேரம் கழித்து இளநீர் வந்தது. பியூனின் முகத்தில் வழிந்த வியர்வை அவர் வெகு தூரம் போய் அலைந்திருப்பார் என்று காட்டியது.
சற்று நேரம் நண்பரிடம் பேசி விட்டு விடை பெற்று வெளியே வந்தோம்.

வெளியே நின்று கொண்டிருந்த பியூன் அப்பாவைச் சற்று தர்மசங்கடத்துடன் பார்த்தார். அப்பா அவரிடம், "இளநீர் ரொம்ப நல்லா இருந்தது" என்று சொல்லி விட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார். "நீயும் ஒரு இளநீர் சாப்பிடு!" என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.

வெளியே வந்ததும், அப்பாவிடம், "அப்பா! உனக்குத்தான்* காப்பி பிடிக்குமே? ஏன் காப்பி சாப்பிட மாட்டேன்னு சொன்னே?" என்றேன்.

"அந்த பியூனுக்கு நான் அவன் முதலாளிக்கு எவ்வளவு நெருக்கம்னு காட்டறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். காப்பி என்றால் பக்கத்தில் எங்காவது ஓட்டலிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பான். வரும்போதே கவனித்தேன். இளநீர்க்கடை எதுவுமே கண்ணில் படவிலை. அதனால்தான் கொஞ்சம் அலையட்டும்னு இளநீர் கேட்டேன்" என்றார் அப்பா.

"அப்புறம் ஏன் அவருக்கு அம்பது ரூபாய் குடுத்தே?"

"பாவம். இவ்வளவு தூரம் அலஞ்சிருக்கானே அதுக்காகத்தான். அந்தப் பணத்தில் அவன் இளநீர் வாங்க மாட்டான். அவனைப் பார்த்தா குடிப்பழக்கம் இருக்கிறவன் மாதிரி தெரியலே. அதனால் அந்தப் பணம் அநேகமா அவன் குடும்பத்துக்குப் போகலாம். குழந்தை இருந்தால் பிஸ்கட், சாக்லேட் ஏதாவது வாங்கிக் குடுப்பான்" என்றார் உலகம் அறிந்த அப்பா.

*அப்பாவை 'வா போ' என்று அழைப்போர் உண்டு, 'வாங்க போங்க' என்று அழைப்போரும் உண்டு. இந்த அப்பா, தன் பிள்ளைகள் தன்னை 'வா போ' என்று அழைப்பதையே விரும்புவார்!


No comments:

Post a Comment